அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் எண்ணம், செயல் வெற்றியடைய வாழ்த்துவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்த 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறியதால் அவர் அதிமுகவின் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்த சூழலில் ஹரித்துவார் செல்வதாக கூறி திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன், அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.
இதையடுத்து இன்று பிற்பகல் மீண்டும் கோவை திரும்பிய செங்கோட்டையன் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ”அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை செங்கோட்டையனே என்னிடம் பேசியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளாக கட்சி இணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என சொல்லிக்கொண்டு உள்ளேன். கழகம் ஒன்றிணைவதற்காக முழு முயற்சியை செங்கோட்டையன் முன்னெடுத்து வருகிறார். இந்த சூழலில் அவர் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.