ஆசியக்கோப்பை தொடரின் முதல் போட்டியில், ஹாங்காங்கை 94 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் வீழ்த்திய நிலையில், இந்திய அணி ஐக்கிய அரபு அமீரத்துடன் இன்று மோதுகிறது.
17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் நேற்று (செப்டம்பர் 09) தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ’ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில், குறிப்பாக அபுதாபி மற்றும் துபாய் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியும், ஹாங்காங் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் செடிகுல்லா அடுல் 52 பந்துகளில் (6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) 73 ரன்களும், அஷ்மதுல்லா 21 பந்துகளில் (5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) 53 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக பாபர் ஹையத் 39 ரன்களும், யாசிம் முர்தஷா 16 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் எவரும் இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ஆஃப்கானிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி இன்று (செப்டம்பர் 10) தனது முதல் போட்டியில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக துபாயில் விளையாட உள்ளது. இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் என பலம் பொருந்தியதாக காணப்படுகிறது. எனவே, ஐக்கிய அரபு அமீரகம் எப்படி இந்திய அணியின் தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.