புதுச்சேரியில் இருந்து ஆய்வுக்காக காரைக்கால் வந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய வாகனம் வழங்காததால் பெண் அதிகாரி உட்பட அதிகாரிகள் பல கிலோ மீட்டர் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடம் காலியாக உள்ளது. அவ்வப்போது அதிக அளவிலான புகார்கள் வரும்பொழுது புதுச்சேரியில் இருந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் காரைக்காலில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது வழக்கம்.
இந்த வகையில் காரைக்காலில் உணவகங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் காலாவதியான பொருட்களை வைத்து சமைத்து விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து புதுச்சேரியில் இருந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜோசப் பிரான்சிஸ் ஆரோக்கிய ராஜ் மற்றும் பங்கஜம் தலைமையிலான அதிகாரிகள் குழு காரைக்கால் மாவட்டத்தில் உணவுகள் பேக்கரி மற்றும் உணவு தயாரிக்க கூடங்களில் ஆய்வு செய்தனர். இதில் மாவட்டம் முழுவதும் காலாவதியான கிலோ கணக்கில் உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதனை அழித்தனர்.
இந்த ஆய்வின் போது காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு உரிய வாகன ஏற்பாடு செய்யப்படாததால் கடந்த இரண்டு நாட்களாக காரைக்கால் நகரப் பகுதி, காமராஜர் சாலை, மார்க்கெட் வீதி, பேருந்து நிலையம், திருநள்ளாறு சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பல கிலோமீட்டர் தூரத்திற்கு பெண் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் நடந்தே சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.
மேலும், வெயிலில் வெகுதூரம் நடந்து ஒவ்வொரு கடையாக ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளை, கடையில் உள்ளவர்கள் ஏளனமாக கருதினார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் நடக்க முடியாத அதிகாரிகள் அவ்வழியாக சென்ற ஆட்டோவில் ஏறி ஆய்வுக்கு சென்றனர்.
எனவே இது குறித்து புதுச்சேரி அரசு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.