கனிமங்கள் மீதான மாநில அரசுகளின் உரிமை பறிக்கப்படுவதாக பூவுலகின் நண்பர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட தகவலில், முக்கியமானக் கனிமங்களை அள்ளித்தோண்டி எடுப்பதிலும், தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் தனியார் நிறுவனங்கள் பணியாற்றும்.
முக்கியமானக் கனிமங்களைக் கண்டுபிடித்து, அகழ்ந்தெடுத்து, பதனிட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது அனைத்தும் ஒன்றிய அரசின் முக்கியமானக் கனிமங்கள் இயக்கத்தின் (Critical Mineral Mission) நோக்கங்களாக உள்ளன. இந்தியா 2070ஆம் ஆண்டுக்கு முன்னர் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய சூரிய உற்பத்தி, காற்றாலை உற்பத்தி, மின்சார வாகனங்கள், மின்கல அமைப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு இக்கனிமங்களை வேகமாக அகழ்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டியதாக ஒன்றிய அரசு கூறுகிறது. இதுவரை 48 கனிமத் தொகுதிகள் ஏலத்திற்குக் கொண்டு வரப்பட்டு அதில் 24 நிறுவனங்களுக்குக் கனிமத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 4ஆம் தேதி அன்று ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.. அக்கடிதத்தில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை வாகனங்கள், கண்காணிப்பு மற்றும் வழிகாட்டிக் கருவிகள் (radar, sonar). மற்றும் தொலைத் தொடர்புக் கருவிகளை உருவாக்க அரிய வகை கனிமங்கள் அதிகம் தேவைப்படுவதால் முக்கியக் கனிமங்கள் மற்றும் அணுக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டங்களை தேசப் பாதுகாப்பு முக்கியத்துவம் கொண்ட திட்டங்களாகக் கருதி அவற்றுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் நடைமுறையிலிருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 29ஆம் தேதி ஒன்றிய அணுசக்தித் துறையானது சுற்றுச்சூழல் துறைக்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், மூன்றாம் நிலை அணுமின் உற்பத்திக்குத் தேவையான தோரியம் எரிபொருளைக் கொண்டிருக்கும் மோனசைட் மற்றும் முதல் நிலை அணுமின் உற்பத்தியில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் யுரேனியம் காணப்படும் கடற்கரைத் தாது மணலை அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.
இக்கோரிக்கைகளைப் பரிசீலித்த ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் முக்கியக் கனிமங்களாகவும் அணுக் கனிமங்களாகவும் வகைப்படுத்தப்பட்ட கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இனி இத்திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறும் நடைமுறையில் ஒரு பகுதியாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்படாது.
மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நிலப்பரப்பு சிறிய பகுதியாக இருந்தாலும் இத்திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கான பரிசீலனையை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் மேற்கொள்ளும் என அறிவித்துள்ளது. இது கனிமங்கள் மீதான மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும். ஏற்கெனவே 24 வகையான கனிமங்களை ஏலம் விடும் உரிமையானது ஒன்றிய அரசிடம்தான் உள்ளது. ஆகவே கனிமத் தொகுதிகளை ஒன்றிய அரசே ஏலம் விடும், அதில் மாநில அரசு தலையிட முடியாது, பொதுமக்கள் கருத்தும் கேட்கப்படாது, சுற்றுச்சூழல் அனுமதியினையும் ஒன்றிய அரசே வழங்கும் என்றாகிவிட்டது.
இது மிகவும் ஆபத்தான போக்காகும். கனிமங்களை அகந்தெடுக்கப் பயன்படுத்தப்படும் சுரங்க நடைமுறை மற்றும் கடற்கரை தாது மணலிலிருந்து கனிமங்களைப் பிரித்தெடுக்கும் பணிகள் மிகுந்த சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இப்பணிகளால் சுற்றுச்சூழல் நாசமாகும், கடலரிப்பு மேலும் தீவிரமடையும், வாழ்விடப் பாதிப்புகள் அதிகரிக்கும், கனிமங்களை அகழ்ந்தெடுக்கும்போது எழும் கதிரியக்க அபாயத்தால் நோய்கள் பல்கிப் பெருகும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும், கேரளாவின் கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களிலும் வி.வி. மினரல் போன்ற தனியார் நிறுவனங்களும், கேரளா மினரல்ஸ் மற்றும் மெட்டல்ஸ் நிறுவனமும் (KMML), இந்திய அரியவகை மணல் நிறுவனமும் (IRE) கார்னெட், ரூட்டைல், சிர்கான், லூக்கொக்சின், சிலிமனைட், இல்மனைட், மோனோசைட் போன்ற கனிம வளங்களை அள்ளித்தோண்டி விற்று, கொள்ளை லாபம் அடைந்தன.
கன்னியாகுமரியில் இயங்கிவரும் ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் (indian Rare Earths Limited) கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் அணுக் கனிம சுரங்கங்களை அமைக்கத் திட்டமிட்டிருந்தது. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் அவசியமில்லை என ஒன்றிய அரசு அறிவித்துவிட்டதால் இத்திட்ட்டம் செயல்பட எவ்விதத் தடையுமில்லாமல் போய்விட்டது.
மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய சுற்றுச்சூழல் துறையின் இந்த அலுவல் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாட வேண்டும் எனக் கோருகிறோம” என்று குறிப்பிட்டுள்ளனர்.