Thursday, September 11, 2025
Homeஅரசியல்அடிப்படை உறுப்பினர் கூட இல்லை.. பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் - ராமதாஸ் அதிரடி நடவடிக்கை

அடிப்படை உறுப்பினர் கூட இல்லை.. பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் – ராமதாஸ் அதிரடி நடவடிக்கை

பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2024 டிசம்பரில் விழுப்புரத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில், பாமக நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ், தனது மூத்த மகள் காந்திமதியின் மகன் பி. முகுந்தனை இளைஞர் பிரிவு தலைவராக அறிவித்தார்.

இதற்கு உடனடியாக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆட்சேபனை தெரிவித்தலிருந்து, தந்தை மகன் இடையே மனக்கசப்பு தொடங்கியது. அதன்பிறகு கடந்த மே மாதம் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் பேசிய ராமதாஸ், பாமக-வில் குழுக்கள் உருவாகிவிட்டதாக, அன்புமணி மீது மறைமுக தாக்குதலை தொடங்கினார்.

அதன்பின்னர் செயல் தலைவராக அன்புமணியை அறிவித்தும், தலைவராக நானே இருப்பேன், சட்டமன்ற தேர்தல் தொடர்பான முடிவுகளை நானே எடுப்பேன் என முடிவெடுத்தார்.

தந்தை ராமதாஸ் என் மீது கோபமாக இருந்தால், அவரிடம் மன்னிப்பு கேட்பதில் தயக்கம் இல்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தும், சமரசம் செய்யத் தயங்கிய ராமதாஸ், தன் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என அறிவித்தார்.

இதன்பிறகு டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தரப்பில் கட்சியின் பழைய நிர்வாகிகள் நீக்கம், புதிய நிர்வாகிகள் நியமனம் என தொடர் அறிவிப்புகள் வந்தன.

கடந்த ஆகஸ்ட் 9ல் மாமல்லபுரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என நிறுவனர் ராமதாஸ் நியமித்த பொதுச் செயலாளர் முரளி சங்கர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை என உத்தரவிட்டது.

இந்நிலையில், பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுவதாகவும், அன்புமணியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் பாமகவினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், அன்புமணி தேவைப்பட்டால் தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்ளலாம் என்றும் ராமதாஸ் என்ற தனிமனிதன் ஆரம்பித்த கட்சியை, உரிமை கோர யாருக்கும் உரிமையில்லை என்றும் மகனாகவே இருந்தாலும் பாமகவை உரிமைகோர முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை, கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களில், ‘அன்புமணி ராமதாஸ் தரப்பில் பாமகவுக்கு உரிமை கோரியோ, அலுவலக முகவரியை நிறுவனர் ராமதாஸுக்கு தெரியாமல் மாற்றியதை போல் மாம்பழம் சின்னத்தை குறுக்கு வழியில் பெறவோ நீதிமன்றத்தை அணுகினால் தங்கள் தரப்பை விசாரிக்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது’ என கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments