2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு எந்தக் கட்சி ஐசியூ-விற்கு செல்வார்கள் என்பது தெரியவரும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி தந்துள்ளார்.
பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு செல்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது கூறிய அவர், “இன்றைய தினம் பரமக்குடியில் மதிப்பிற்குரிய இம்மானுவேல் சேகரன் குரு பூஜையில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறோம். பாஜக என்றைக்குமே மறைந்த தியாகிகளையும் பெரியவர்களையும் வணங்கவும், போற்றவும் எங்களுடைய கடமைகளை செய்து இருக்கிறோம். அந்த வகையில் இன்று மரியாதை செய்வதற்காக வந்திருக்கிறோம்.
அதிமுக வலுவாக தான் உள்ளது. அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி போகும் இடமெல்லாம் ஆரவாரம் கொடுக்கிறார்கள், ஆதரவு கொடுக்கிறார்கள். அவர்கள் பொறாமையிலேயே சொல்கிறார்கள். அதிமுகவை பாஜக உடைக்க வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் தான் இன்றைக்கு அவர்களை தலைவராக ஏற்று இருக்கிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “பாஜக ஐசியூவில் உள்ளதாக உதயநிதி சொல்லி இருக்கிறார். 2026க்கு பிறகு யார் ICU-க்கு செல்கிறார் என தெரியும். ஓபிஎஸ் கூட்டணிக்கு எந்த நிபந்தனையும் தெரிவிக்கவில்லை. டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை, முதல்வர் வேட்பாளர் ஆக ஏற்கக்கூடாது என சொல்வது, அவரது சொந்த கருத்து. ஓபிஎஸ் இடம் எந்த நேரமும் அழைத்துப் பேசுவேன் யார் மீதும் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. அண்ணன் ஓபிஎஸ் இடம் கண்டிப்பாக பேசுவேன் பேசிவிட்டு சொல்கிறேன்.
செங்கோட்டையனை அமைச்சர்கள் சந்தித்ததால் கூட்டணிக்குள் எந்த வித இடர்பாடும் இல்லை. உள்துறை அமைச்சர் இங்கு வந்து சந்தித்தால் தான் அப்படி பேச வேண்டும். இவர் போய் அங்கு சந்தித்திருக்கிறார்” என்றார்.
திமுக வலுவாக இருப்பதாக அண்ணாமலை கருத்து குறித்த கேள்விக்கு, ‘திமுக வலுவாக இருக்கிறது என உதயநிதி சொல்வதாக சொல்லி இருக்கிறார். அண்ணாமலை திமுக வலுவாக இருப்பதாக சொல்லவில்லை’ என்றார்.
விஜய் சனிக்கிழமை பிரசாரம் செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘சனிக்கிழமை குறித்து உங்களுக்கு தெரியும். அதன் பிறகு நான் எதுவும் சொல்ல வேண்டாம்’ என்றார்.
மேலும் கூறிய அவர், “எனக்கு பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் மற்றும் நட்டா ஜி என் மீது அளவற்ற அன்பும், பாசம் வைத்திருக்கிறார்கள். கங்கைகொண்ட சோழபுரத்தில் பேசும் போது கூட நயினார் நாகேந்திரன் மீது பாசம் வைத்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். உள்துறை அமைச்சர் என் வீட்டிற்கு வந்து நலம் விசாரித்து இருக்கிறார். இப்படி இருக்கும்போது நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை.
ஊடகங்களும் பத்திரிக்கையாளர்களும் பத்திரிகை தர்மத்தை காப்பாற்ற வேண்டும் தனியார் நாளிதழுக்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு வேறு ஏதாவது தொழில் செய்யலாம். இப்படி எழுவதற்கு பதிலாக குடும்ப ரீதியாக அவர்கள் ஏதாவது தொழில் செய்யலாம். இதற்கு மேல் காட்டமாக எனக்கு பேச தெரியாது. நானும் இது போன்று தேவையில்லாத விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.