Thursday, September 11, 2025
Homeதமிழ்நாடு‘ராமதாஸ் அறிவிப்பு செல்லாது’… கட்சி விதியை சுட்டிக்காட்டி வழக்கறிஞர் பாலு பதில்

‘ராமதாஸ் அறிவிப்பு செல்லாது’… கட்சி விதியை சுட்டிக்காட்டி வழக்கறிஞர் பாலு பதில்

ராமதாஸின் அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது என்றும் பாமக கட்சியை கட்டுப்படுத்தாது என்றும் அன்புமணி ஆதரவாளரும், வழக்கறிஞரமான பாலு தெரிவித்துள்ளார்.

பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்து இருந்தார். மேலும், அன்புமணி தேவைப்பட்டால் தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்ளலாம் என்றும் கட்சியை உரிமை கோர யாருக்கும் உரிமையில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகம் வெளியே அன்புமணி ஆதரவாளரும், வழக்கறிஞருமான பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் குறித்து, நிறுவனர் ராமதாஸ் கூறிய கருத்துக்கள் தொடர்பாக, பாமக சார்பாக விளக்கத்தை வழங்க உள்ளேன். பாமக விதியின்படியும், கட்சி சட்டத்தின் படியும் கட்சி நிர்வாக பணிகளை கட்சி பணிகளை மேற்கொள்ளக்கூடிய அதிகாரங்கள் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

கட்சி விதிகளின்படி நிறுவனருக்கு நிர்வாக பணிகளை மேற்கொள்ள அதிகாரம் வழங்கவில்லை. நீக்கம் செய்வது, கூட்டம் நடத்துவது என எந்த முடிவுகளாக இருந்தாலும், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது.

இன்றைக்கு மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டு இருக்கக்கூடிய அறிவிப்பு, கட்சி விதிகளுக்கு எதிரானது. ராமதாஸின் அறிவிப்பு பாமகவை கட்டுப்படுத்தாது. அன்புமணி தொடர்ந்து தலைவராக வருகிறார்.

ஆகஸ்ட் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் கட்சி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தேர்தல் நெருங்கி வரக் கூடிய வேளையில், கட்சியின் அமைப்பு தேர்தலை நடந்த கூடிய சூழல் இல்லை. எனவே கட்சித் தலைவர், செயலாளர், பொருளாளர் 3 பேரின் பதவி காலத்தை 2026 ஆகஸ்ட் வரை நீட்டித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களின் ஒருமனத்தோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் ஆணையத்திற்கும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை தெரிவித்தோம். எங்களது விளக்கத்தை தேர்தல் ஆணையம் உரிய வகையில் ஆய்வு செய்து பாமகவின் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவி காலத்தை பொது குழுவின் தீர்மானத்தின் படி 2026 ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் என கூறினார்.

பாமகவின் தலைவராக அன்புமணியும், பொதுச் செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமாவும் தொடர்கிறார்கள். ராமதாஸ் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு கட்சி விதிகளின்படி தேர்தல் ஆணையம் சமீபத்தில் வழங்கியுள்ள உத்தரவு அடிப்படையில் செல்லத்தக்கது அல்ல. பாமகவை கட்டுப்படுத்தாது.

பாமக நிறுவனர் ராமதாஸ் தான். ஆனால், நிர்வாக பணிகளை மேற்கொள்ள அவருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. இதைத் தவிர தலைவர், பொருளாளர், செயலாளர் என வெளியிடக்கூடிய அவரது அறிவிப்புகள், கட்சி விதிகளுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் எதிரானது. அதை அடிப்படையாகக் கொண்டு பாமக நிர்வாகிகள் என்ற அடிப்படையில் எந்த செய்தியையும் வெளியிட வேண்டாம்.

இன்றிலிருந்து தலைவர், பொருளாளர், செயலாளர் என்பதில் குழம்பிக் கொள்ள வேண்டாம். தேர்தல் ஆணையம் முறையாக எங்களுக்கு தலைவர், செயலாளர், பொருளாளர் என்ற பதவிக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது. பதவி காலத்தை நீட்டித்து உள்ளது. அந்த அடிப்படையில் ராமதாஸின் அறிவிப்பு, கட்சியை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது” என கூறினார்.

தேர்தல் ஆணையம் கொடுத்த கடிதத்தை வெளியிடலாமே என்ற கேள்விக்கு, அது குறித்து விரைவில் உரிய நேரத்தில் வெளியிடுவோம் என தெரிவித்தார். மேலும், ‘கடந்த சில மாதங்களாக ராமதாஸ் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகிறார். அவருடைய கருத்துக்கு கருத்து சொல்வது அழகாக இருக்காது முறையாக இருக்காது’ என தெரிவித்தார்.

ஒட்டுக்கேட்பு கருவி மூலம் தன்னை கண்காணித்தாக ராமதாஸ் கூறி உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாலு, ’அன்புமணி ராமதாஸ் உடன் நெருங்கி பழகி இருக்கிறேன் அன்புமணிக்கு உளவு பார்க்கும் பழக்கம் கிடையாது அதில் விருப்பமும் கிடையாது நாட்டமும் கிடையாது

அன்புமணி உளவு பார்த்து இருந்தால் இப்படி ஒரு சூழல் இருந்திருக்காது எனவும் உளவு பார்த்ததாக கூறப்படுவது தவறு எனவும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என யாரும் கணிக்க முடியாது. கட்சியின் செய்தி தொடர்பாளராக தேர்தல் ஆணையம் கூறிய கருத்துக்களை உங்களிடம் கூற வந்துள்ளேன். பாமகவின் கொள்கைகளை அன்புமணி தான் நிறைவேற்றி வருகிறார். கேவியட் மனு போட வேண்டியது நாங்கள் தான். பாமகவில் நிலவி வந்த பல்வேறு குழப்பங்களுக்கு தேர்தல் ஆணையம் மூலம் நல்ல முடிவு கிடைத்திருக்கிறது என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments