1980களில் தமிழக அரசியல் களம் முழுமையாக திராவிட கட்சிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது. அதேநேரம் 1980களின் இறுதியில் வட மாவட்டங்களில் நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டங்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தன. 1980 முதல் வன்னியர்களின் இட ஒதுக்கீடுக்காக போராட்டத்தை முன்னெடுத்த ராமதாஸ், 1984ம் ஆண்டு சென்னை மெரினாவில் பட்டினிப் போராட்டத்தை நடத்தி கவனம் ஈர்த்தார்.
தொடர்ந்து 1985ம் ஆண்டு சென்னையில் பேரணி, ஆர்ப்பாட்டம், 1986ல் பல்வேறு வடிவங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பட்டை நாமப் போராட்டம், எம்ஜிஆருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டி போராட்டம், சாலை மறியல் என அடுத்தடுத்து பல அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் மருத்துவர் ராமதாஸ். 1987ம் ஆண்டு எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது, மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கம் நடத்திய இப்போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறியது. இறுதியில் துப்பாக்கிச் சூடு நடக்க, இப்போராட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதன்பின்னரே போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து 1989ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சராக பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதி, வன்னியர்கள் உட்பட 108 சமுதாயங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தது 20% இட ஒதுக்கீடு வழங்கினார். ஆனால் இதனை கடுமையாக விமர்சித்த ராமதாஸ், 1989ம் ஆண்டு வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக உருமாற்றினார். சென்னை சீரணி கலையரங்கில் நடைபெற்ற பாமக தொடக்க நிகழ்வில், பத்து லட்சம் பேர் வரை பங்கேற்றனர்.
அன்றைய காலக்கட்டத்தில் ஒரு கட்சியின் தொடக்க விழாவில் பத்து லட்சம் பேர் கலந்துகொண்டது அவ்வளவு எளிதானது அல்ல. அப்போது “தனது சொந்தச் செலவில்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன், வாழ்நாளில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன், தானும் தனது குடும்ப வாரிசுகளும் கட்சியில் எந்தப் பதவிக்கும் வர மாட்டோம், சட்டமன்றத்துக்கோ நாடாளுமன்றத்துக்கோ என் கால் செருப்புக்கூட செல்லாது, இவை என் இறுதிமூச்சு வரையிலும், எனக்குப் பின்னாலும்கூட அமலில் இருக்கும்.” என பிரகடனம் செய்தார் ராமதாஸ்.
இன்னொரு பக்கம் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரை பாமகவின் கொள்கை வழிகாட்டிகளாக அறிவித்த ராமதாஸ், கட்சியின் பொதுச் செயலாளாரக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இருக்க முடியும் என்கிற வகையில் பைலாவை நிர்மாணித்தார். இதனால், திராவிட கட்சிகளான திமுக, அதிமுக இரண்டிற்கும் மாற்று சக்தியாக பாமக உருவெடுக்கும் என அரசியல் விமர்சகர்கள் ஆரூடம் கூறிவந்தனர்.
இவையனைத்தும் வெறும் சொல்லாக மட்டும் இருந்துவிடக் கூடாது என, செயலிலும் இறங்கினார் ராமதாஸ். இதற்கு சில உதாரணங்களாக, 1988ம் ஆண்டு, கும்பகோணம் அருகிலுள்ள குடிதாங்கி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரின் சடலத்தை வன்னியர்கள் வசிக்கும் பகுதி வழியாகக் கொண்டு செல்ல கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது தானே நேரடியாகச் சென்று வன்னிய மக்களின் எதிர்ப்பையும் மீறி சடலத்தைச் சுமந்து சென்று அடக்கம் செய்தார். இச்சம்பவத்தை சுட்டிக் காட்டி, ராமதாஸை ‘தமிழ்க் குடிதாங்கி’ என்று அழைத்தார் தொல்.திருமாவளவன்.
அதேபோல், 1992ம் ஆண்டு சென்னை பெரியார் திடலில் ‘தமிழர் வாழ்வுரிமை மாநாடு’ நடத்தி, அதில் தமிழீழத்துக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்றினார். மேலும், பேரணியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவப்படத்தைப் பிடித்து தனித் தமிழீழத்துக்கு ஆதரவாக முழக்கமிட்டார். இதனால் “பிரிவினைவாத சக்திகளுக்கு தமிழகத்தில் சிறிதும் இடமில்லை” என்றுக் கூறி, ராமதாஸ் உள்ளிட்டோரை தேசத்துரோக வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா.
ஆனாலும் தேர்தல் அரசியலில் பாமக தனக்கான வாக்கு வங்கியை எளிதாக கட்டமைத்தது. அதனால் பாமக தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே வேலூர் மாவட்டத்தின் பெரணமல்லூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 22,000 வாக்குகளைப் பெற்றது. 1989-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், 33 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி அடைந்தது. இருப்பினும் கட்சி தொடங்கி சில மாதங்களிலேயே தனித்து போட்டியிட்டு 15 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று 6% வாக்குவங்கியை உறுதி செய்தது.
இதனால், அடுத்தடுத்த தேர்தல்களில், திமுக, அதிமுகவின் கூட்டணியில் பாமகவுக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது. அதன்படி, 1991 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்த பாமக தோல்வியைத் தழுவியது. 1996 தேர்தலில் திவாரி காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தோல்வி, 1998 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்து ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, நான்கு இடங்களில் வென்றது. 1999 தேர்தலில் தி.மு.க- பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்று எட்டு இடங்களில் போட்டியிட்டு ஐந்து தொகுதிகளில் வெற்றி, 2004 தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து ஆறு இடங்களில் வெற்றி, 2009 நாடளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று ஆறு இடங்களிலும் தோல்வி, 2014 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து எட்டு இடங்களில் போட்டியிட்டு தரும்புரி தொகுதியில் மட்டும் வெற்றி, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட ஏழு இடங்களிலும் தோல்வியை தழுவியது.
மாபெரும் மாற்றுச் சக்தியாக பார்க்கப்பட்ட பாமக, ஆரம்பகால தேர்தல் அரசியலில் விஸ்வரூபம் எடுத்து, பின்னர் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போனது. அதேபோல், நாட்கள் செல்ல செல்ல சாதிய அரசியலுக்குள் சிக்குண்ட பாமகவை, வாரிசு அரசியலும் ஆக்டோபஸ் போல உண்டு செரிக்கத் தொடங்கியது. இதன் விளைவுதான் தற்போது தனது மகன் என்றும் பாராமல் அன்புமணியை பாமகவில் இருக்கு நீக்கி அதிரடிக் காட்டியுள்ளார் மருத்துவர் ராமதாஸ். கடந்த சில மாதங்களாக பாமகவில் நிலவி வந்த குழப்பமான சூழல், இப்படியாகதான் முடிவை எட்டும் என அனைவரும் அறிந்ததே.
2004ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி வைத்த பாமகவுக்கு. ஒப்பந்தின்படி இரண்டு மாநிலங்களவை சீட் கிடைத்தன. அப்போது ராமதாஸ் தேர்வு செய்து வைத்திருந்த இருவர் மீதும் அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு அதிருப்தி நிலவ, அவர்களுக்கு மாற்றாக ஒரு சீட்டை அன்புமணிக்கு கொடுக்க சொல்லி வலியுறுத்தினர். இதனால் வாரிசு அரசியல் விமர்சனங்களில் சிக்க வேண்டியிருக்கும் என அஞ்சிய ராமதாஸ், பின்பு ஒப்புக்கொண்டார். இதன்மூலம் அன்புமணி மாநிலங்களவைக்கு முதல் முறை அடியெடுத்து வைக்க, அவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பும் கிடைத்தது.
பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தவிர்க்கும் தடை சட்டம், குட்கா, பான்மசாலா தடை ஆகியவற்றில் அன்புமணிக்கு மிகப்பெரிய பங்குண்டு. மத்திய அமைச்சராக இருந்த போது அன்புமணி பல்வேறு சுகாதார செயல்திட்டங்களை கொண்டு வந்தார். இதற்கெல்லாம் வழிகாட்டியாக இருந்தது அவரது தந்தை ராமதாஸ்தான் என சொல்லப்பட்டது.
இன்னொரு பக்கம் 1995ம் ஆண்டு ராமதாஸ் ஆரம்பித்த பசுமை தாயகம் திட்டத்திற்கு முதலில் தலைவராகப் பொறுப்பு வகித்த அன்புமணியின் நிர்வாகச் செயல்பாடுகளைப் பார்த்த கட்சியினர், இளைஞர் அணி தலைவர் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்தனர். அப்போது முதல் ராமதாஸுக்கு இணையாக பாமகவில் தனது ஆதிக்கத்தை வெளிக்காட்டத் தொடங்கிய அன்புமணி, 2016 தேர்தலில் தன்னை முன்னிலைப்படுத்தியதோடு, சமீபமாக தன்னுடைய மனைவியையும் மகள்களையும் கட்சிக்குள் முதன்மைப்படுத்தினார்.
முக்கியமாக தர்மபுரியில் சௌமியாவை வேட்பாளராக நிற்கவைத்த்தோடு, பிரசாரத்தில் தன்னுடைய மகள்களயும் களமிறக்கினார். இதனைப் பார்த்து உஷாரான ராமதாஸ் தன்னுடைய மகள் வழி பேரனான முகுந்தனுக்கு பாமகவில் முக்கியத்துவம் கொடுத்தார். இங்கிருந்து ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையேயான மோதல் மெல்ல மெல்ல புகையத் தொடங்கியது.
தான் தான் பாமக நிறுவனர், அதனால் தனக்கே கட்சியின் முழு அதிகாரமும் என ராமதாஸ் கர்ஜிக்க, அன்புமணியோ பாமகவின் தலைவர் நானே, அதனால் எனது கட்டுப்பாட்டில் தான் கட்சி இருக்கும் என முழங்கினார். இதனால் கலங்கிய ராமதாஸ், பாமகவின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கி, செயல் தலைவராக நியமிப்பதாக அறிவித்தார். மேலும், கட்சியின் வளர்ச்சிக்கு அன்புமணி தடையாக இருப்பதாகவும் ராமதாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுவில் ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தனை இளைஞரணி செயலாளராக அறிவித்தார். அதற்கு மேடையிலேயே தனது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்திய அன்புமணி, ராமதாஸ் முன்னிலையில் மைக்கை வீசிவிட்டுச் சென்றார். மேலும், தான் பனையூரில் தனி அலுவலகம் தொடங்கியிருப்பதாகவும், கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் தன்னை அங்கு வந்து சந்திக்கலாம் எனவும் அன்புமணி அறிவித்தார்.
இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக அடுத்த சில தினங்களில் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணி மீது அதுவரை இல்லாத வகையில் பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என்றும், கட்சியின் வளர்ச்சிக்கு அவர் தடையாக இருப்பதாகவும் கூறினார். முக்கியமாக பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அன்புமணியும் அவரது மனைவி செளமியாவும் தனது காலில் விழுந்து அழுத்தாக ராமதாஸ் கூறியது, தமிழக அரசியல் களத்தை சூடாக்கியது.
இதன் பின்னணியில் பாஜகவுக்கு நேரடியாகவே தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது. அதாவது அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளித்ததில், ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதில் சிக்கினால் தனது எதிர்காலம் பாதிக்கலாம் என்பதற்காகவே, அன்புமணி பாஜகவின் கூட்டணியை விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த கட்சியுடன் தொடர்ந்து பயணித்தால் தமிழ்நாட்டில் பாமகவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிடும் என்பதே ராமதாஸின் கவலை. இதன் காரணமாகவே, கூட்டணி முடிவுகளை தானே எடுப்பேன் என மீண்டும், மேடையிலேயே திட்டவட்டமாக தெரிவித்தார் ராமதாஸ்.
அதேபோல், தன்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கிய பிறகு, “நான் என்ன தவறு செய்தேன்” என அன்புமணி கேள்வி எழுப்பியதற்கு, “அன்புமணி தவறு செய்யவில்லை, அவரை அமைச்சராக்கி நான்தான் தவறு செய்துவிட்டேன்” என்றார் ராமதாஸ். மேலும், “அழகான ஆளுயர கண்ணாடி என்ற கட்சியை ஒரே நொடியில் உடைத்தது யார்? அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லையே என்று பலரும் வருந்தினார்கள். அண்ணா சொன்னது போல கடமை, கண்ணியம் கட்டுப்பாடுடன் கட்சியை நடத்தி வந்தேன். அதற்கு அன்புமணி களங்கம் ஏற்படுத்திவிட்டார். நான் சந்தித்த அவமானங்கள், அவலங்கள், ஏளனம், ஈட்டி போன்ற இழி சொற்களையும் எளிதில் கடந்து வந்துவிடுவேன். ஆனால் வளர்த்த கடா மார்பில் இடித்ததில் நிலைகுலைந்து போய்விட்டேன். இதையும் கடந்து செல்வேன்” என தனது விரக்தியை மொத்தமாக வெளிக்காட்டினார் ராமதாஸ்.
ஒரு கட்டத்தில் அன்புமணிக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகளை ராமதாஸ் நீக்குவதும், அதேபோல் ராமதாஸ் பக்கம் நிற்கும் பாமக நிர்வாகிகளை அன்புமணி நீக்குவதும் தொடர்கதையானது. இப்படி இருவரும் கட்சி நிர்வாகிகளை நீக்குவதும் சேர்ப்பதுமாக வெளிப்படையாகவே அறிக்கைகள் வெளியிட, தைலாபுரத்துக்கே தலைவலி தைலம் தேவைப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதனிடையே ஆகஸ்ட் 17ம் தேதி ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இது தொடர்பாக ஆக.31ம் தேதிக்குள் அன்புமணி விளக்கம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அன்புமணி இதுவரை எந்தவித விளக்கமும் கொடுக்கவில்லை என்பதால், அதன் மீதான நடவடிக்கையாக அன்புமணி பாமகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
அதேபோல் அன்புமணியுடன் இருப்பவர்கள் திருந்துவதற்கு வாய்ப்புத் தருகிறேன், அவர்கள் மீண்டும் வந்தால் பாமகவில் இணையலாம் என தெரிவித்துள்ளார். முக்கியமாக அரசியல்வாதி என்பதற்கு தகுதியற்ற அன்புமணி, இனிமேல் அவரது பெயருக்கு பின்னால் இரா என்ற இனிஸியலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அன்புமணி ராமதாஸ் என தனது பெயரை பயன்படுத்தக் கூடாது எனவும் கூறியுள்ளார்.
ராமதாஸின் இந்த முடிவை அன்புமணி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதே பலரது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அதேபோல், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாமகவில் நடக்கும் இந்த அதிகார சண்டை யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.