ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் செப்டம்பர் 09 தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ’ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
ஹாங்காங் அணிக்கு எதிரான முதல் போட்டியில், ஆஃப்கானிஸ்தான் அணியும், ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில், இந்திய அணியும் வெற்றிபெற்றன. இந்நிலையில், மூன்றாவது லீக் போட்டியில் ஹாங்காங் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின.
இதில், டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்துவீச தீர்மானித்ததை அடுத்து, ஹாங்காங் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் ஹாங்காங் அணி 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. நிஷகத் கான் 42 ரன்களும், ஜீசன் அலி 30 ரன்களும், யாசிம் முர்தஷா 28 ரன்களும் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில் முஷ்டபிஷுர் ரஹ்மான், ரிஷத் ஹொசைன் மற்றும் டஸ்கின் அஹமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணி, 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அசத்தலாக ஆடிய அந்த அணியின் கேப்டன் லிட்டன் தான் 39 பந்துகளில் (6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) 59 ரன்கள் எடுத்தார்.
அவருக்கு உறுதுணையாக தௌஹித் ஹிரிதாய் 36 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். ஆட்டநாயகன் விருது லிட்டன் தாஸுக்கு வழங்கப்பட்டது. இந்த தொடரில் வங்கதேசம் முதல் வெற்றியை பதிவு செய்தது. அதே சமயம் ஹாங்காங் அணி 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. இன்றைய போட்டியில், ஓமன் அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.