தவெக தலைவர் விஜய் பெரம்பலூரில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய் வரும் 13ம் தேதி திருச்சியில் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே பிரச்சாரம் செய்ய 23 நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி அளித்தனர். இந்த நிலையில் 13ம் தேதி மாலை பெரம்பலூரில் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பெரம்பலூர் குன்னம் பேருந்து நிலையம் மற்றும் காமராஜர் வளைவு பகுதியில் பிரச்சாரம் செய்ய மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தவெக பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடிதம் வழங்கினார். அதை பரிசீலித்த போலீசார் விஜய் கேட்ட இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தில் அனுமதி அளித்துள்ளனர். காமராஜர் வளைவு பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மேற்கு வானொலித்திடல் பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது, போக்குவரத்திற்கு பாதிப்பு தரக் கூடாது, பிரச்சாரத்தில் பட்டாசு வெடிக்கக் கூடாது, காவல்துறை அனுமதியுடன் விளம்பர பேனர் வைக்க வேண்டும், என பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த அனுமதியை போலீசார் கொடுத்ததாக கூறப்படுகிறது.