மென்பொருள் பொறியாளர் கவின் கொலை வழக்கில் கைதான எஸ்.ஐ. ஜாமீன் கோரி மனு மீதான விசாரணை வரும் 15ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த ஜூலை 27-ம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் காதல் விவகாரம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் சுர்ஜித்தின் உறவினரான தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெயபால் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, டிஎஸ்பி ராஜ்குமார் மற்றும் ஆய்வாளர் திருமதி உலகராணி ஆகியோர் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட மூவரையும் காவலில் எடுத்து விசாரித்த பின்னர், அவர்கள் மீண்டும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சரவணன், சுர்ஜித், ஜெயபால் ஆகிய மூவரின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் (வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம்) காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமா, மூவரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதனிடையே, சரவணன் தரப்பில் அவரது வழக்கறிஞர் சிவசூர்ய நாராயணன், திருநெல்வேலி 2வது கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வரும் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று அரசு மற்றும் சரவணன் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன்வைப்பார்கள். அதன் அடிப்படையில், சரவணனுக்கு ஜாமீன் வழங்குவதா அல்லது ரத்து செய்வதா என நீதிபதி உத்தரவிடுவார்.