Thursday, September 11, 2025
Homeதமிழ்நாடுவிநாயகர் சதுர்த்தி: செய்ய வேண்டியவை பட்டியல் இதோ!

விநாயகர் சதுர்த்தி: செய்ய வேண்டியவை பட்டியல் இதோ!

ஒரு தொழிலை தொடங்கும் முன்னர், முதற்கடவுளான விநாயகர் பெருமானை வணங்கி தொடங்குவது நமது வழக்கம். ஆவணி மாதத்தின் வரும் வளர்பிறைச் சதுர்த்தி தினத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வீட்டில் வைத்து, மலர்களால் அலங்கரித்து, படையலிட்டு, மந்திரங்கள் சொல்லி வழிபட்டு, பத்து நாட்கள் வரை கொண்டாடி, பின்னர் அந்த சிலையை நீர்நிலைகளில் கரைத்து வழிபடுவது வழக்கம்.

வடமாநிலங்களில் 10 நாட்கள் வரை கொண்டாடப்படும் இவ்விழா, தென் மாநிலங்களை பொறுத்த அளவில் ஐந்து நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி நாளில் என்னென்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முக்கியமாக விநாயகர் சதுர்த்தி அன்று சிலை வைப்பதற்கு முன்பு, வீட்டையும், பூஜை அறையையும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்கி வந்து நீங்கள் விரும்பிய இடத்தில் வைத்து அருகம்புல் மாலை சாற்றி, பூக்களால் அலங்கரித்து, மோதகம், சுண்டல், வடை, பாயாசம் மற்றும் பழங்கள், உங்களால் முடிந்த ஏதேனும் ஒன்றை படைத்து வழிபடுவது சிறப்பு. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுவதற்கு மட்டுமின்றி, விநாயகர் சிலை வாங்குவதும் நல்ல நேரத்திலேயே வாங்க வேண்டும்.

எந்தெந்த நேரத்தில் வழிபடலாம்?

ஆகஸ்ட் 26ம் தேதி விநாயகர் சிலை வாங்குபவர்கள் மாலை 4.50 முதல் 5.50 வரை அல்லது மாலை 6.30 முதல் இரவு 8.30 வரையிலான நேரத்தில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் வைப்பது சிறப்பு. ஆகஸ்ட் 26ம் தேதியன்று விநாயகர் சிலையை வாங்கியவர்கள், ஆகஸ்ட் 27ம் தேதியன்று காலை 6 மணி முதல் 7.20 வரையிலான நேரத்தில் வழிபடலாம். ஆகஸ்ட் 27ம் தேதியன்று விநாயகர் சிலை வாங்குபவர்கள், ஆகஸ்ட் 27ம் தேதி காலை 9.10 மணி முதல் 10.20 வரை, விநாயகர் சிலையை வாங்கி வந்து வைத்து வழிபடலாம். இலை போட்டு படையலிட்டு வழிபடும் வழக்கம் உள்ளவர்கள், ஆகஸ்ட் 27ம் தேதி பகல் 1.35 முதல் 2 மணி வரை படையல் போட்டு வழிபடலாம். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை மாலையில் செய்யும் வழக்கம் உள்ளவர்கள், ஆகஸ்ட் 27ம் தேதி மாலை 6.10 மணிக்கு மேல் வழிபடுவது சிறப்பு.

வீட்டில் விநாயகர் சிலையை எத்தனை நாட்கள் வைத்திருந்தாலும் தினமும் வெற்றிலை பாக்கு, ஒரு வாழைப்பழம், முடிந்தால் ஏதாவது ஒரு சுண்டல் அல்லது இனிப்பு படைத்து வழிபட வேண்டும். வீடுகளில் விநாயகர் சிலையை மூன்று அல்லது ஐந்து நாட்கள் வைத்து வழிபடுவார்கள். ஆகஸ்ட் 26ம் தேதி விநாயகர் சிலை வாங்கி இருந்தால் மூன்றாம் நாளான ஆகஸ்ட் 28ம் தேதி வியாழக்கிழமை அன்று விநாயகரை எடுத்துச் சென்று கரைக்கலாம். ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சிலை வாங்கி இருந்தால், ஆகஸ்ட் 31ம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை எடுத்துச் சென்று கரைக்கலாம்.

நீர் நிலைகள் எதுவும் அருகில் இல்லாதவர்கள், வீட்டில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, விநாயகர் சிலையை கரைத்து, பிறகு அந்த தண்ணீரை கால் படாத இடத்தில் அல்லது பூத்தொட்டியில் ஊற்றி விடலாம். விநாயகர் சிலையை கரைக்க எடுத்துச் செல்லும் போது ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரமாக பார்த்து எடுத்துச் செல்ல வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments