Thursday, September 11, 2025
Homeதமிழ்நாடுபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் திருத்தேர் விழா: மழையில் நனைந்து பக்தர்கள் உற்சாகம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் திருத்தேர் விழா: மழையில் நனைந்து பக்தர்கள் உற்சாகம்!

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் திருத்தேர் விழா நடைபெற்றது. அப்போது பெய்த மழையில் நனைந்தபடி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகே உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி அருள்மிகு ஶ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருத்தேர் விழா நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 18 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், உற்சவர் கற்பக விநாயகர் வெள்ளி மூஷிகம், யானை, குதிரை, கமலம், ரிஷபம், பூதம் மற்றும் சிம்ம வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் வழங்குவார்.

விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று (ஆகஸ்ட் 27), காலையில் உற்சவர் கற்பக விநாயகர் பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரத்தில் பெரிய தேரில் எழுந்தருளினார். திருநாள் மண்டபத்தில் உற்சவர் விநாயகப் பெருமானும், ஶ்ரீ சண்டிகேஸ்வரர் சுவாமியும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், கோபுர தீபம், கும்ப தீபம், நாக தீபம் காண்பிக்கப்பட்டு, ஷோடச உபசாரங்கள் மற்றும் மலர் அர்ச்சனைகள் நடைபெற்றன.

மகா தீப ஆராதனைக்குப் பின்னர், பக்தர்கள் பெரிய தேரில் விநாயகப் பெருமானையும், இந்த ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட சிறிய தேரில் ஶ்ரீ சண்டிகேஸ்வரரையும் எழுந்தருளச் செய்தனர். தேர் பவனி தொடங்கிய சில நிமிடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் மழையில் நனைந்தபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். சிறிய தேரை பெண்களும் குழந்தைகளும் இழுத்து, விழாவில் பங்கேற்றனர். மழையின் குளிர்ச்சியுடன் பக்தர்களின் உற்சாகமும் இணைந்து, திருத்தேர் விழா மிகுந்த பக்தி பரவசத்துடன் நிறைவடைந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments