விஞ்ஞான ஊழலா?! கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041’க்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் திமுக அரசு அறிவித்த, கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041 திட்டம் மெகா முறைகேடுகளுக்கு வழிவகுக்கப்பதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்ச்சித்துள்ளார். கோயம்புத்தூர் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 21 பேரூராட்சிகள் மற்றும் 66 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி, சுமார் 1,531 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041 தயாரிக்கப்பட்டது. நகர ஊரமைப்பு திட்டத்தில் இணைந்துள்ள நில வகைப்பாடு மாற்றங்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தத் திட்டம் கோவை மக்களிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் கருத்து புறக்கணிப்பு, நில வகைப்பாடு மாற்றங்கள், திமுகவுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஜி.ஸ்கொயர் நிறுவனத்திற்கு ஆதரவான சூழல், 50,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளிட்ட குற்றசாட்டுகளை தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்தத் திட்டத்தில் நில வகைப்பாடு மாற்றங்களை மறு ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டங்களை முறையாக நடத்தி, திருத்தங்களுடன் புதிய மாஸ்டர் பிளானை வெளியிட வேண்டும் என அவர் திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.