விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வெவ்வேறு விழாக்களில், சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கலந்து கொண்டார். பொதுமக்கள் அளித்த வரவேற்பும், ஆலய தரிசனமும் மனதுக்கு நிறைவான நாளாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விழாவின் முதல்பகுதியாக நேற்று காலை பாகூரில் பகுதியில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தினார். மாலையில் உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் ஏற்பாட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் ஜோஸ் சார்லஸ் மார்டின் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுடன் உரையாடினார்.

உழவர்கரை தொகுதிக்கு பிறகு திருபுவனை தொகுதியில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்ற ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மதகடிப்பட்டு சர்வீஸ் சாலையில் இருந்து பிரமாண்ட வாகனப் பேரணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மதகடிப்பட்டு பகுதியில் உள்ள அருள்மிகு நூதன வெற்றி விநாயகர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து அமிர்தேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மக்களிடையே உரையாடி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து காலாப்பட்டில் சட்டமன்ற உறுப்பினர் திரு. கல்யாணசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கொண்டாட்டத்திலும் பங்கேற்றார். அங்கும் அவருக்கு சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. நேற்று முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களில் பங்கேற்றதை, புதுச்சேரி மக்களுடன் நாள் முழுவதும் இருந்தது நிறைவான நாளாக அமைந்ததாக தனது சமூக வலைத்தளத்தில் ஜோஸ் சார்லஸ் மார்டின் குறிப்பிட்டுள்ளார்.
