ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான போரை ஊக்குவிக்க இந்தியாவும் மறைமுகமாக உதவுவதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ஒருவர் கூறியிருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வர்த்தக ஆலோசகராக இருப்பவர் பீட்டர் நவர்ரோ. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய உதவியாளரான இவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இந்தியாவின் செயலால் அமெரிக்காவில் உள்ள ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகின்றனர் என்றார். இந்தியாவின் அதிக வரி விதிப்புகளால், அமெரிக்காவில் தொழிலாளர்கள் வேலையிழக்கின்றனர் என்றார். மோடியின் போருக்கு நாங்கள் விலை கொடுக்க வேண்டியுள்ளது என்றும் நேரடியாக பிரதமரின் பெயரை குறிப்பிட்டு விமர்சித்தார்.
அப்போது, புதினின் போர் என கூற விரும்புவதற்கு பதிலாக, தவறாக கூறி விட்டீர்களா? என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டதற்கு, வேண்டும் என்றே தான் கூறினேன் என மீண்டும் அழுத்தம் திருத்தமாக பிரதமர் மோடியின் பெயரை உச்சரித்தார். அமைதிக்கான வழியானது புதுடெல்லியின் வழியேயும் செல்கிறது என பீட்டர் கூறினார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளால் அந்நாட்டுக்கு பொருளாதார வளம் சேருகிறது என்றும் அது போரை ஊக்குவிக்கிறது என்றும் அமெரிக்கா கூறி வருகிறது. இதற்கு எதிர்வினையாக
25 சதவீத கூடுதல் வரி உள்பட மொத்தம் 50 சதவீத வரியானது இந்திய பொருட்கள் மீது விதிக்கப்படும் என டிரம்ப் அரசு தெரிவித்தது. இந்த நடைமுறை நேற்று (27-ந்தேதி) அதிகாலை 12.01 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனால், இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும். வேலைவாய்ப்பின்மை மற்றும் பணி நீக்கம் போன்றவையும் அந்நிறுவன தொழிலாளர்களை பாதிக்கும். இதேபோன்று 2026 நிதியாண்டில் 0.2 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியும் குறையும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.