புதுச்சேரியை சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியரை போதை பொருள் கடத்தல் வழக்கில் டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட தனியார் வங்கி ஊழியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவருக்கு கடந்த ஜனவரி மாதம் செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், தன்னை மத்திய குற்றபிரிவு போலீஸ் என கூறியுள்ளார்.
தொடர்ந்து, செவிலியரின் ஆதார் கார்டு, செல்போன் எண் ஆகியவற்றை பயன்படுத்தி தைவான் நாட்டிற்கு போதை மருந்துகள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதற்காக அவரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாகவும், இதனால் அவர் வீட்டை விட்டு எங்கேயும் செல்லக்கூடாது என கூறியுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டுமென்றால் அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை உடனடியாக தான் சொல்கின்ற வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும் எனவும் இல்லையென்றால் சிறைக்கு செல்ல நேரிடும் என்றும் மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன அந்த செவிலியர் தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூபாய் 9 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பின்னர், சிறிது நேரம் கழித்து அழைப்பு வந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அந்த எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் சந்தேகமடைந்த அந்தப் பெண் செவிலியர், இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், செவிலியர் பேசிய எண் மற்றும் பணம் அனுப்பிய வங்கி கணக்கு உள்ளிட்டவைகளை வைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பொந்து சங்கர்ராவ் என்பவரது வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, விசாகப்பட்டினம் சென்ற போலீசார் அவரை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் பணிபுரியும் வங்கியின் மேலாளர் ஹர்திக் என்பவர் கூறியதன்பேரில் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் அடுத்து பொந்து சங்கர்ராவிடம் இருந்து ரூபாய் 9 லட்சம் ரொக்கம், செல்போன்கள், காசோலை உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள வங்கி மேலாளர் ஹர்திக்கை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ளதாகவும், அவரை கைது செய்த பின்னரே இவர்கள், யார் யாரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள் என தெரியவரும் என்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், யாரேனும் கால் செய்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை என்று கூறி உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்கிறோம் என்று தெரிவித்தால் பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஏனெனில், டிஜிட்டல் அரெஸ்ட் என்பது சட்டத்தில் இல்லை. எனவே இதுபோன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக சைபர் க்ரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.