கிரிக்கெட் லெஜெண்ட் டான் பிராட்மேனின் தொப்பியை சுமார் இரண்டரை கோடிக்கு ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகம் வாங்கியுள்ளது.
ஜெண்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட் விளையாட்டில் சிலர் தொட இயலாத சாதனையை புரிந்திருப்பர். அதனால், அவர்கள் காலத்திற்கும் மறக்க முடியாத வீரராக ரசிகரகள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பர். அதில், விவியன் ரிச்சர்ட்ஸ், சர் கர்ஃபீல்ட் சோபர்ஸ், பிரையன் லாரா, இயன் போத்தம், கபில்தேவ், ஜாக் காலிஸ், ஷேன் வார்ன், இம்ரான் கான், முத்தையா முரளிதரன், சச்சின் டெண்டுல்கர், வாசிம் அக்ரம், விராட் கோலி ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
அதிலும், டான் பிராட்மேன் எப்போதும் முதலிடம் பிடித்திருப்பார். பிராட்மேன் வெறும் 52 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 6,996 ரன்கள் குவித்துள்ளார். மேலும், முதல்தரப் போட்டிகளில் 28,067 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு தொடரில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர் (810), டெஸ்டில் அதிக சராசரியை (99.94) கொண்டவர், அதிவேகமாக 6000 ரன்கள் (68 இன்னிங்ஸ்) குவித்தவர் என பல சாதனைகளை படைத்துள்ளார்.
இந்நிலையில், டான் பிராட்மேனின் தொப்பி சுமார் இரண்டரை கோடிக்கு (2,86,700 அமெரிக்க டாலர்) விலை போயுள்ளது. 1946-47 ஆஷஸ் தொடரின் போது டான் பிராட்மேன் அணிந்திருந்த தொப்பியை ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகம் வாங்கியுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய முதல் தொடரான 1946-47 தொடரில் ஆஸ்திரேலியா அணியின் தலைவராக இருந்தபோது பிராட்மேன் இந்த தொப்பியை அணிந்திருந்தார். 1948ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.
இது குறித்து கலைத்துறை அமைச்சர் டோனி பர்க் கூறுகையில், தொப்பியை வாங்குவது எதிர்கால சந்ததியினருக்கு தேசிய வரலாற்றின் ஒரு முக்கியமான பகுதியைப் பாதுகாப்பது போன்றதாகும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “எல்லா காலத்திலும் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று கூறப்படும் டொனால்ட் பிராட்மேனைப் பற்றி கேள்விப்படாத ஒரு ஆஸ்திரேலியரைச் சந்திப்பது உங்களுக்கு கடினமாக இருக்கும். அவரது அடையாள சின்னமான பச்சை நிற தொப்பி, ஆஸ்திரேலியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் இருப்பதால், பார்வையாளர்கள் தங்களது விளையாட்டு மற்றும் கலாச்சார வரலாற்றை நெருங்கி அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
இந்த தேசிய புதையல் அனைத்து ஆஸ்திரேலியர்களும் அனுபவிக்கும் வகையில், தேசிய அருங்காட்சியகத்தில் ஒரு இடத்தை வழங்குவதால் நாங்கள் உண்மையிலே மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்