என்னதான் வருடம் முழுவதும் படித்தாலும் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள் தான் ஒரு மாணவனை எடைபோட உதவும். அப்படித்தான், நான் ஆட்சிக்கு வந்தால் அதைச்செய்வேன், இதைச்செய்வேன் என்று மேடைகளில் எவ்வளவு தான் வீரவசனம் பேசினாலும், ஒவ்வொரு ஆண்டின் முடிவில் வெளியாகும் புள்ளி விவரங்கள் காட்டிவிடும் அந்த ஆட்சியின் தரம் என்னவென்பதை..இதனை உறுதிப்படுத்தும் விதமாக தேசிய அளவிலான இரண்டு புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. இரண்டும் இருவேறு தரவுகள், ஆனால் ஒன்றிணைத்துப் பார்த்தால் கிடைக்கும் முடிவுகள் நம் தலையை 360 டிகிரி கோணத்தில் சுழலச் செய்துவிடும். முதலில் புள்ளி விவரங்களை பார்த்து விடுவோம். INDIA TODAY மற்றும் C VOTER ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்திய MOOD OF THE NATION என்ற கருத்துக்கணிப்பில் பல்வேறு விதமான பிரிவுகளில் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் நாட்டில் உள்ள சிறிய மாநிலங்களில் சிறந்த முதலமைச்சர் யார் என்றொரு பிரிவும் உள்ளது. அதாவது 10-க்கும் குறைவான மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலங்களில் முதலமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி என்று கேள்வி எழுப்பி கிடைத்த முடிவுகளின்படி பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் முதலிடத்தில் சிக்கிம் மாநிலத்தின் பிரேம் சிங் தமங், 2-வது இடத்தில் அருணாச்சலத்தின் பெமா காண்டு, 3-ம் இடத்தில் திரிபுராவின் மாணிக் சாஹா, 4-ம் இடத்தில் மேகாலயாவின் கான்ராட் சங்மா, 5-ம் இடத்தில் மிசோராமின் லால்துஹோமா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் சிறிய மாநிலமான புதுச்சேரி ஏன் இடம்பெறவில்லை. அந்த மாநிலத்தின் முதலமைச்சரான என்.ரங்கசாமி ஏன் சிறந்த முதலமைச்சர் பட்டியலில் இடம்பெற முடியவில்லை என்பது தான் புதுவை மக்களின் கேள்வி.அடுத்த புள்ளி விவரத்தைப் பார்ப்போம்..ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு (NEW) அமைப்புகள் சமீபத்தில் இந்தியாவில் உள்ள பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரூ.931 கோடிகளுடன் முதலிடத்தில் ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு, ரூ.332 கோடிகளுடன் 2-ம் இடத்தில் அருணாச்சலத்தின் பெமா காண்டு, ரூ.51 கோடிகளுடன் 3-ம் இடத்தில் கர்நாடகாவின் சித்தராமையா, ரூ. 46 கோடிகளுடன் 4-ம் இடத்தில் நாகலாந்தின் நெப்யூ ரியோ, ரூ.42 கோடிகளுடன் 5-ம் இடத்தில் மத்தியப்பிரதேசத்தின் மோகன் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இத்தோடு நிற்கவில்லை இந்த பட்டியல்.ரூ.38 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் 6-ம் இடத்தில் இருப்பவர் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி என்று கூறுகிறது. மேற்காணும் முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் எல்லாம் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் நமது பெயரும் இடம்பெற வேண்டும் என்று தங்கள் மாநிலங்களுக்கு என்னனென்ன திட்டங்களையோ தீட்டுகிறார்கள்.

அதனால் கவனத்திற்கு உள்ளாகி சிறிய மாநிலங்களாக இருந்தாலும் சிறப்பான முதலமைச்சர்கள் என்ற பெயரைப் பெற்றுள்ளனர். முதலமைச்சர் ரங்கசாமியும் அப்படி புதுச்சேரிக்கு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்து மத்திய, மாநில அரசுகளை திரும்பி பார்க்க வைத்திருந்தால் கட்டாயம் அவர் பெயரும் பட்டியலில் வந்திருக்கும் அல்லவா என்று புதுவை மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 2001-ல் 4 ஆண்டுகள், 2006-ல் 2 ஆண்டுகள், 2011-ல் முழுமையாக 5 ஆண்டுகள், இதோ 2021-ல் கிட்டத்தட்ட முழுமையாக 5 ஆண்டுகள்.. அப்படிப் பார்த்தால் ஏறத்தாழ 16 ஆண்டுகள் புதுச்சேரியின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர் என்.ரங்கசாமி. இத்தனை ஆண்டுகால ஆட்சியில் புதுச்சேரியின் வாழ்க்கைத் தரத்தை எப்படி உயர்த்தி இருக்க வேண்டும். மாறாக தன்னுடைய வாழ்க்கைத் தரத்தை மட்டும் தான் உயர்த்திக் கொண்டார். சமீபத்தில் கூட ஒன்றேகால் கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசுக் காரை வாங்கியதை மக்கள் அறிவார்கள்.கை மறைக்கும் கதர் சட்டை, அதிராமல் பேசுவது போன்றவற்றால் எளிமையின் சின்னம் என்ற பேரை வேண்டுமானால் பெறலாம். ஆனால் புள்ளி விவரங்கள் கூறிவிடும் புதையலின் அளவை. இனியாவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு முதலமைச்சர் பாடுபட வேண்டும் என்பதே புதுச்சேரி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.