இரு அமைச்சர்கள் என்னை பயங்கர டார்ச்சர் செய்கிறார்கள் என்றும் என்னை சுற்றி உளவாளிகள் உள்ளனர் ஆளுங்கட்சி பெண் எம்எல்ஏ சந்திர பிரியங்கா பரபரப்பு குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா, நெடுங்காடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு கடந்த இரண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை சட்டமன்றத்தில் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு போக்குவரத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது நெடுங்காடு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை சந்திர பிரியங்கா வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “சமீபத்தில் ஒரு பேனர் வைத்துள்ளதால், அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் எனது புகைப்படம் இருப்பதால் எனக்கும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பின்னர் யார் அந்த புகார் அனுப்பினார்கள் என்று விசாரணை நடத்தியதில் அவர் மிகவும் வறுமையில் உள்ளவர் என்பதும், அவருக்குப் பின்னால் இருந்து அமைச்சர் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.
நான் ஒதுங்கி இருந்தாலும் என்னை கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை என்பதால் தொந்தரவு கொடுக்கிறார். புதுச்சேரி அமைச்சர்கள் சில நாட்களாக பயங்கர டார்ச்சர் செய்கின்றனர். நான் அமைச்சராக இருந்தபோது எவ்வளவு பிரச்சனை கொடுத்தார்கள் என்பதை நான் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
புதுவையில் இரண்டு அமைச்சர்கள் தொடர்ந்து பிரச்சினை கொடுக்கிறார்கள். வீடு வீடாக வாக்குக் கேட்டு வெற்றிபெற்ற பிறகு மக்களை மறந்து விட்டு அதிகாரத்தை வைத்துக்கொண்டு நாகரிகமான அரசியல் இல்லை. ஒரு பெண் கஷ்டப்பட்டு வளர்ந்து வந்து விடக்கூடாது. அப்படியும் மீறி வந்தால் அசிங்கப்படுத்தி எவ்வளவு கேவலப்படுத்துகிறீர்கள்” என்று சந்திர பிரியங்கா கூறியுள்ளார்.
மேலும், ’அமைச்சர்கள் டார்ச்சர் கொடுத்தாலும், முதலமைச்சர் ரங்கசாமிக்காகத் தான் விட்டுக்கொடுத்து வருகிறேன். நான் வீட்டுக்கு வந்து செல்லும் பாதையில் வேவு பார்க்கிறீர்கள். என்னை சுற்றி உளவாளி வைக்கிறீர்கள். எனது போன் டேட்டாவை கலெக்ட் செய்து விட்டீர்கள். நான் பாதுகாப்பான எந்த ஒரு இடத்திலும் இல்லை.
இவை அனைத்தும் எனக்கு தெரியும். காவல்துறையினரிடம் புகார் கொடுத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் எனக்கு இவ்வளவு பிரச்சனை என்றால் மக்கள் கஷ்டப்படுவார்கள்’ என்று ஆதங்கத்துடன் சந்திர பிரியங்கா வெளியிட்டுள்ளார் தற்போது இந்த வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. மேலும் இந்த விவகாரம், புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பூகம்பத்தை கிளப்பி உள்ளது.