புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 30 துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு இன்று 101 மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 30 துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மே 28ஆம் தேதி வெளியான நிலையில், இப்பணிக்கு மொத்தம் 37,349 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதன்படி, போட்டித் தேர்வு இன்று இரண்டு அமர்வுகளாக காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், மதிய அமர்வு 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் நடைபெறுகிறது. புதுச்சேரியில் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், தாகூர் கலைக்கல்லூரி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி உட்பட 80 மையங்களில் நடைபெற்று வருகிறது.
அதேபோல், காரைக்கால் பகுதியில் 12 மையங்களிலும், மாகே பகுதியில் 3 மையங்களிலும், எனாம் பகுதியில் 6 மையங்களிலும் என புதுச்சேரி மாநிலம் முழுவதும் மொத்தமாக 101 மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது.
மேலும் தேர்வு நடைபெறும் நான்கு பிராந்தியங்களிலும் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் மொபைல் இணைய சேவை தடுப்பு, சிசிடிவி கண்காணிப்பு, தேர்வர்களின் உடல் சோதனை, பயோமெட்ரிக் வருகை பதிவு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
முறைகேடுகளில் ஈடுபட்டால், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது, எதிர்கால தேர்வுகளிலிருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே குறிப்பிட்ட நேரத்தை தாண்டி காலதாமதமாக வந்த தேர்வர்கள் சிலர் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.