அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள புதிய வரி விதிப்பால் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பதாக தங்க நகை வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 50 சதவிகிதம் வரிவிதிப்பை அண்மையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடைமுறைப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ஏற்றுமதி 60.2 மில்லியன் டாலர் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகும் என சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பால் பல்வேறு துறைகளின் உற்பத்தி பாதிக்கப்படும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் கடல் உணவுப் பொருட்களின் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 26.5% ஆக உள்ளது. குறிப்பாக, இறால் ஏற்றுமதி, மின்னணு சாதனங்கள், தமிழ்நாட்டின் ஜவுளித்துறை, முட்டை போன்ற உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்து, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்திருப்பதாக தெரிவிக்கும் தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர், இதன் காரணமாகவே ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து கடும் உச்சத்தை தொட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் விதித்து உள்ள புதிய வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளதால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை, சவரனுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் வரையில் உயர்ந்திருப்பதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம் 9,705 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்து உள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 9,620 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 85 ரூபாயும், சவரனுக்கு 680 ரூபாயும் உயர்ந்து உள்ளது.
இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 77 ஆயிரத்து 640 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.