ஊருக்கு கோயில் அழகு. அந்த கோயில்களுக்கு குளங்கள் அழகு என்பார்கள். ஆனால் குளங்கள் இருந்தும் பயன்படுத்த முடியாமல் இருப்பது சரிதானா?. அப்படிப்பட்ட தூர்ந்து போன குளங்களை புனரமைக்கும் புண்ணிய காரியத்தை சத்தமில்லாமல் செய்து வருகிறார் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின்.

தென்னிந்தியாவின் ஆன்மிக தலைநகராக திகழும் புதுச்சேரியில் திரும்பிய திசையெங்கும் கோயில்கள் உள்ளதைப்போல் ஏரிகளும், குளங்களும் நிறைய இருக்கின்றன. புதுச்சேரியில் காமராஜ்நகர் தொகுதிக்கு உட்பட்ட சாரம் பகுதியில் தனித்துவ பக்தி வரலாறுகளை தன்னகத்தே கொண்ட ஸ்ரீ முத்துவிநாயகர், ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி, ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் தேவஸ்தானம் உள்ளது.

இதில் நாகமுத்து மாரியம்மன் கோயில் சன்னதியின் பின்புறம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் மாபெரும் குளம் ஒன்று இருந்தது. அதன் கரையில் இருந்த பூந்தோட்டங்களால் இது பூங்குளம் என்று அழைக்கப்பட்டது. காலவெள்ளத்தில் இந்த குளம் தூர்ந்து போனது. இந்நிலையில் புதுச்சேரி அரசானது பூங்குளத்திற்கு அருகே புதிய குளம் ஒன்றை வெட்டியது. அந்த குளமும் உரிய பராமரிப்பின்றி கரைகள் உடைந்தும், சுற்றுச்சுவர் சரிந்தும், புதர் மண்டியும் பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிப்போனது.

இந்நிலையில் காமராஜ்நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், இந்த கைவிடப்பட்ட பூங்குளத்தை பார்வையிட்டார். இதனை பழைய பொலிவுடன் மீட்டெடுப்பதற்கான பணிகளை செய்து முடிப்பேன் என அவர் பக்தர்களிடமும், தொகுதி மக்களிடமும் வாக்குறுதி அளித்தார். அப்போது இந்த புண்ணிய காரியத்தை தானே முன்னின்று செய்து முடிப்பதாக பிரபல சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் முன்வந்தார். அமைச்சரும் அதற்கு இசைவு தந்தார்.
அதன்பின்னர் மாயாபஜார் படத்தில் வருவது போல வேலைகள் மளமளவென நடந்தன. ஜேசிபி எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு மண்டிக்கிடந்த புதர்கள் வேரோடு அள்ளப்பட்டன, தூர்ந்து போன கரைகள் லாரி லாரியாக மண் கொட்டப்பட்டு பலப்படுத்தப்பட்டது. சரிந்து போன சுற்றுச்சுவர் புதிய கட்டுமானத்தோடு கம்பீரமாக உயர்ந்து நின்றது. குளத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய இரும்பு வேலிகள் நிர்மாணிக்கப்பட்டன.

கோயில்களின் இயற்கை சூழல்களை பாதுகாப்பதும், பக்தர்களின் தேவைகளை நிறைவேற்றுவதும், உண்மையான இறைத் தொண்டாகும். அதன்படியே மதங்களை கடந்து பக்தர்களுக்கு அன்னதான பணிகளையும், கோயில் வளர்ச்சிக்கு உதவும் பணிகளையும் தொடர்ந்து செய்து வருவதாக கூறுகிறார் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின்.
இது குளமா என சந்தேகத்தோடு பார்த்தவர்கள் எல்லாம் இதுவல்லவா குளம் என்று ஆச்சர்யப்பட்டு பார்க்கும் அளவுக்கு வேலைகள் கனஜோராக நடந்து வருகின்றன. மதங்களை கடந்து, ஆலய சேவையே ஆண்டவன் சேவை என்ற வகையில் கோயில் குளத்தை மீட்டுக் கொடுத்த சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு பக்தர்கள் மனதார நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஒரு கோயிலோடு நிற்காமல் புதுச்சேரியில் எங்கெல்லாம் கோயில் குளங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதோ, அங்கெல்லாம் ஜோஸ் சார்லஸ் மார்டினின் இறைப்பணி தொடர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.