Thursday, September 11, 2025
Homeஅரசியல்அரசியல்வாதிகளின் வழக்குகளில் மட்டும் காலதாமதம் ஏன்? - நீதிபதி காட்டம்

அரசியல்வாதிகளின் வழக்குகளில் மட்டும் காலதாமதம் ஏன்? – நீதிபதி காட்டம்

அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் ஏன் காலதாமதம் ஏற்படுகிறது எனக் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியது. அதில், 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை, தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, புகார்தாரரான அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று மீண்டும் விசாரணை வந்தது.

அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், டெண்டர் முறைகேடு தொடர்பாக கோவை மாநகராட்சி துணை ஆணையராக இருந்த காந்திமதி என்பவருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்து தமிழக அரசு, ஆகஸ்ட் 30ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர அரசு அனுமதி பெற வேண்டியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான ராஜ்திலக் தெரிவித்தார்.

இதையடுத்து, அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்படுகிறது என நீதிபதி கேள்வி எழுப்பினார். அரசு நிதி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில், குறிப்பாக நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் காவல் துறையினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments