தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில், நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் ஒருசார்பாக பேசினார் என்று நடிகை அம்மு தனது ஆதங்கத்தை வெளிக்காட்டி உள்ளார்.
இந்தியாவில் நாய் கடி நெருக்கடி வேகமாக அதிகரித்து வருவதை பொது சுகாதார நிபுணர்களை மிகவும் கவலையடையச் செய்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சக்கத்தின் கணக்கீட்டின் படி இந்தியாவில் ரேபிஸால் ஏற்படும் மனித இறப்புகள், கடந்த 3 மூன்று ஆண்டுகளில் முறையே 21, 50 மற்றும் 54 ஆக பதிவாகியுள்ளன. ஆனால், 2022ஆம் ஆண்டு மட்டும் 305 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மேலும், 2024ஆம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 37 லட்சத்து 17 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு நாளும் சராசரியாக 10 ஆயிரம் பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நெறிமுறைகளை வகுத்து வருகின்றன.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பாகும், ‘நீயா, நானா’ நிகழ்ச்சியில் தெரு நாய்களை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் குறித்து நடந்த விவாதம் நடைபெற்றது. அது தொடர்பான வீடியோக்கள் மட்டுமல்லாமல், ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நடிகை அம்மு ராமச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை வைத்து பலர் கிண்டலடித்துக் கொண்டு இருக்கிறார்கள். நிறைய தவறான வார்த்தைகள் பயன்படுத்துகிறீர்கள். அதுக்கு எல்லாம் வருத்தப்பட்டு நான் இந்த வீடியோ வெளியிடவில்லை.
நீயா நானாவில் என்ன நடந்தது என்பதை எல்லாருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இந்த வீடியோ. நீயா நானா என்பது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தான். அதில் நடைபெறும் விஷயங்களை பதிவுசெய்த பின்பு, ஒரு விஷயத்தை வெறும் 45 நிமிஷமாக குறைத்து வெளியிடுகிறார்கள்.
நீயா நானா நிகழ்ச்சியின் நடந்தவற்றை தொகுக்காமல், முழுமையான வீடியோவை பார்த்தால் தான் என்ன நடந்தது என்று தெரியவரும். ஒரு பக்கம் நாயை விரும்புறவர்கள் தெரு நாயை ஆதரிக்கிறோம் என்று இருந்தோம். இன்னொரு பக்கம் வேண்டாம் என்று சொல்லுகிறவர்கள் இருந்தார்கள்.
எதிர்தரப்பில் இருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு தான் அதிகம். எங்கெல்லாம் நாய்களால் பிரச்சனை நடந்ததோ, அவர்களை எல்லாம் தேடி தேர்வு செய்து, அவர்களை கூட்டிவந்து கேள்விகேட்ட கோபிநாத் அவர்கள், எங்கள் தரப்பு நியாயத்தை கேட்கவில்லை. நாங்கள் பேசியதை கத்தரித்து, தொகுத்து வேறுமாதிரி வெளியிட்டார்கள்.
மக்களே நமக்கு நாய்களும் வேண்டும். அதே மாதிரி அந்த நாய்களிடம் கடிவாங்காமல் எப்படி தோழமையோடு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றுதான் நாங்கள் இந்த நிகழ்ச்சிக்கு சென்றோம். மற்றபடி உங்களுடைய வெறுப்பை சம்பாதிக்க வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம் கிடையாது.
நானும் ஒரு மனுஷி தான். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. இன்றைக்கு நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்றால், முக்கியமான காரணம் நீங்கள் தான். அப்படி இருக்கும் போது எதற்காக உங்களை கஷ்டப்படுத்த நான் யோசிக்க போகிறேன். இதை கொஞ்சமாவது யோசித்து பாருங்கள்” என்று ஆதங்கத்தோடு பேசியுள்ளார்.