பெண் எம்.எல்.ஏ.வை டார்ச்சர் செய்த அமைச்சர்கள் யார் என்பதை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என காரைக்கால் திமுக எம்.எல்.ஏ.கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா, நெடுங்காடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு கடந்த இரண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை சட்டமன்றத்தில் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு போக்குவரத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
குடும்ப பிரச்சனை காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. தற்போது நெடுங்காடு சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை சந்திர பிரியங்கா வெளியிட்டுள்ளார்.
நெடுங்காடு சட்டமன்ற தொகுதி பட்டியலின ஆளுங்கட்சி பெண் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சந்திர பிரியங்கா தன்னை இரண்டு அமைச்சர்கள் டார்ச்சர் செய்வதாக கூறி கடந்த இரு தினங்களுக்கு முன் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலாகி புதுச்சேரியில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனிடையே, சந்திர பிரியங்கா தூண்டுதலின் பேரில், கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக முன்னாள் கணவர் சண்முகம் காவல் நிலையத்தில் புகாரின் அளித்திருந்தார். இதன் பேரில், லாஸ்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்காவின் முன்னாள் கணவர் சண்முகத்திற்கு மிரட்டல் விடுத்த நபர், ஈஸ்வர்ராஜ் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் காரைக்கால் திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், திருப்பட்டினம் எம்.எல்.ஏ., நாக தியாகராஜன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், “புதுச்சேரி மாநிலம் நெடுங்காடு தொகுதி பெண் எம்எல்ஏ கூறிய புகாரை உட்கட்சி விவகாரமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும், அவர் காரைக்கால் எம்எல்ஏ என்ற காரணத்தினால் நாங்கள் கட்சியைத் தாண்டி அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது” என்றனர்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நீதிமன்றமே யார் அந்த சார் என்று? கேட்டது போல, யார் அந்த அமைச்சர்கள்? என கேட்பதாக கூறிய நாஜிம் எம்.எல்.ஏ., தன்னை அவமதித்த அமைச்சர்களின் பெயரை சந்திரபிரியா கூற வேண்டும் என தெரிவித்தனர்.
டார்ச்சர் செய்த அமைச்சர்கள் யார் என்பதை சபாநாயகர் தலையிட்டு கண்டறிய வேண்டும் என வலியுறுத்தினர். சட்டமன்ற உறுப்பினர் டார்ச்சர் செய்த யார் அந்த அமைச்சர்…? மிரட்டி அதிகாரி யார்..? என சபாநாயகர் கேட்டு அறிய வேண்டும். சட்டமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும் என்றனர்.
மேலும், நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என நாஜிம் கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் யார் அந்த சார் போல், யார் அந்த அமைச்சர்கள் என புதுச்சேரியில் பூதகரமாகியுள்ளது.