தேனியில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தப் போராட்டத்தில் தேனி மாவட்ட வருவாய் துறையை சேர்ந்த அலுவலக உதவியாளர்கள் முதல் தாசில்தார்கள் வரை சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேனி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த நான்கு வருடங்களாக வருவாய்த்துறையில் உள்ள காலி பணியிடங்கள் குறித்த பட்டியல் வெளியிடுவதில் குளறுபடிகள் உள்ளது. இதனால் 12 துணை வட்டாட்சியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இது குறித்து மாவட்ட நிர்வாகத்தை சந்தித்து காலி பணியிடங்கள் குறித்த பட்டியலை வெளியிட பலமுறை கோரிக்கை வைக்கும் பலன் இல்லை என வருவாய்த்துறை அலுவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் பதவி மூப்பு அடிப்படையில், பதவி உயர்வு பட்டியல் தயார் செய்யப்படுவதில்லை என்றும், நேரடி நியமனங்கள் அதிகளவு செய்யப்படுவதால் பதவி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பெறுபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், ஏற்கனவே முறைகேடாக தயார் செய்யப்பட்ட பதவி உயர்வு பட்டியலை திரும்ப பெற வேண்டும், முறையான பதவியில் உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலு,ம் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பதவி வழங்குவதற்காகவும், பணம் பெற்றுக்கொண்டு நேரடி நியமனங்கள் செய்வதற்காகவும் போலியாக பதவி உயர்வு பட்டியல்கள் தயார் செய்யப்படுவதால், அதை எதிர்த்து வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதும் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் வழக்கை நடத்தாமல் காலதாமதப்படுத்தி வருவாய் துறை அலுவலர்களுக்கு அநீதி இழைப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
மாவட்டத்திலுள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், அதற்கு முன்பு தற்காலிக பதவி உயர்வு வழங்க வேண்டும், நேரடி நியமனங்களை தடை செய்ய வேண்டும், இல்லையென்றால் தொடர் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
நேற்று மாலை தொடங்கிய போராட்டம், நள்ளிரவு வரை நீடித்த போதும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராமல் புறக்கணித்தனர்.
இந்நிலையில், தேனி மாவட்டத்தின் தேனி, சின்னமனூர், போடிநாயக்கனூர் வட்டாரம் மற்றும் கோம்பை பேரூராட்சி என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெறுவதாக இருந்தது.
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினரின், தொடர் போராட்டம் காரணமாக, தேனி மாவட்டத்தில் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெறாது என தெரிய வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையான அலைக்கழிப்புக்கு ஆளாக உள்ளனர். மேலும், அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்ட செய்யப்பட்டு, விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில் அரசு நிதி வீணாகியது குறிப்பிடத்தக்கது.