சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 50 சதவிகிதம் வரிவிதிப்பை அண்மையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடைமுறைப்படுத்தினார். இதனால் இந்தியாவின் ஏற்றுமதி 60.2 மில்லியன் டாலர் அளவுக்கு பாதிப்புக்குள்ளாகும் என சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பால் பல்வேறு துறைகளின் உற்பத்தி பாதிக்கப்படும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இறால் ஏற்றுமதி, மின்னணு சாதனங்கள், தமிழ்நாட்டின் ஜவுளித்துறை, முட்டை போன்ற உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்து, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்திருப்பதாக தெரிவிக்கும் தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர், இதன் காரணமாகவே ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து கடும் உச்சத்தை தொட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் விதித்து உள்ள புதிய வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளதால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை, சவரனுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் வரையில் உயர்ந்திருப்பதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை கடந்த மாதம் (ஆகஸ்ட்) 27ஆம் தேதி ஒரு சவரன் மீண்டும் ரூ.75 ஆயிரத்தை தாண்டிய நிலையில், 29ஆம் தேதி ரூ.76 ஆயிரத்தையும் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்து கொண்டே வருகிறது.
நேற்று கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,725-க்கும், ஒரு சவரன் ரூ.77,800-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.78 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.
அந்த வகையில் இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்திருந்தது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 80 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்க நகை ரூ.9,805ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு பவுன் சவரன் தங்க நகை 78,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் தங்கம் வாங்கும் கணவு, எட்டா தூரத்தில் இருக்கிறது.