பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 4ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மதுல்ல குர்பாஷ் 8 ரன்களில் வெளியேறினாலும், 2ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த செடிகுல்லா அடல் மற்றும் இப்ராஹிம் ஜோர்டான் இணை நிலைத்து நின்று ஆடியது.
இருவரும் இணைந்து 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதுவே, இரண்டாவது விக்கெட்டுக்கு அடிக்கப்பட்ட 2ஆவது அதிகப்பட்சமாகும். பின்னர் செடிகுல்லா அடல் 65 ரன்களிலும், ஜோர்டான் 64 ரன்களிலும் வெளியேறினார். பின்னர், களமிறங்கிய வீரர்கள் யாருமே இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை. பாகிஸ்தான் தரப்பில் அதிகப்பட்சமாக பஹீம் அஷ்ரஃப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர், 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிகப்பட்சமாக ஹாரிஸ் ராஃப் 34 ரன்களும், பஹர் ஜமான் 25 ரன்களும், சல்மான் அகா 20 ரன்களும் எடுத்தனர்.
ஆஃப்கானிஸ்தான் அணியினர் சிறப்பாக பந்துவீசி பாகிஸ்தான் அணியை கட்டுப்படுத்தினர். 9 விக்கெட்டுகளை 111 ரன்களுக்குள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் ஃபரூக்கி, ரஷித் கான், மொஹமது நபி மற்றும் நூர் அஹமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.