Thursday, September 11, 2025
Homeதமிழ்நாடுமுதியவரை அடித்து விரட்டுவதற்கா ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்? - ராமதாஸ் காட்டம்

முதியவரை அடித்து விரட்டுவதற்கா ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்? – ராமதாஸ் காட்டம்

முதியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் அடித்து, உதைத்து விரட்டுவதற்கா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரத்தை அடுத்த சாத்தூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், தமது கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து வினா எழுப்பிய முதியவர் ஒருவரை அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரியும், காவல் உதவி ஆய்வாளரும் கொடூரமாக அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். மனிதத் தன்மையற்ற இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஆற்காடு ஒன்றியத்தில் உள்ள முத்துப்பேட்டை கிராமத்தில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதே கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் என்ற முதியவர் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்திருந்தார். ஆனால், பல நாள்களாகியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், சாத்தூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு சென்ற முதியவர் திருவேங்கடம், அங்கிருந்த அதிகாரிகளை அணுகி தமது மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று வினவியுள்ளார். மேலும் தமது மனுவை பெற்றுக் கொண்டதற்காக ஒப்புகைச் சீட்டு வழங்கும்படி கோரியுள்ளார்.

இதை சகித்துக் கொள்ள முடியாத கிராம நிர்வாக அதிகாரியும், அவருக்கு துணையாக வந்த அதிகாரிகளும் பெரியவர் வேங்கடபதியை அடித்து உதைத்துள்ளனர். அதுமட்டுமின்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அங்கு சென்ற காவல் உதவி ஆய்வாளரும் அந்த முதியவரை மார்பில் குத்தி விரட்டியடித்துள்ளார். இந்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. மனு கொடுக்க வந்த முதியவரை அதிகாரிகள் தாக்கியதை மன்னிக்கவே முடியாது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அறிவிக்கப்பட்ட போதே அது ஊரை ஏமாற்றும் திட்டம் என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை 35 லட்சம் பேர் மனு அளித்துள்ள நிலையில், அவர்களில் 90 விழுக்காட்டிற்கும் கூடுதலான மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், முகாம்கள் தொடங்கி 50 நாள்களாகியும் இதுவரை ஒருவருக்குக் கூட உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அப்பட்டமான படுதோல்வி என்பதற்கு இவை தான் சான்றாகும்.

மனு மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என்று எவரேனும் கேட்டால், அதற்கு பதிலளிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை ஆகும். ஆனால், அந்தக் கடமையைக் கூட செய்யாமல் மக்களை விரட்டியடிப்பது பெரும் குற்றமாகும். இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களுக்கு உதவி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தானே தவிர, கேள்வி கேட்பவர்களை அடித்து உதைப்பதற்கான திட்டம் இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். அதிகாரத் திமிருடன் மக்களை அவமதிப்பவர்களுக்கு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments