Thursday, September 11, 2025
Homeதமிழ்நாடுஎடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உரிமையியல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி பி.பி.பாலாஜி விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையின் போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், 2018ம் ஆண்டிலிருந்து சூர்யமூர்த்தி கட்சியின் உறுப்பினராக இல்லை. கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவர், கட்சி விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரை எதிர்த்து சூர்யமூர்த்தி போட்டியிட்டதாக வாதிடப்பட்டது.

சூர்யமூர்த்தி தரப்பில் வாதாடுகையில், சூரியமூர்த்தி கட்சி விதிப்படி அதிமுக உறுப்பினராக தொடர்கிறார். பொதுச்செயலாளர் பதவி அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் விருப்பத்தை மீறி கட்சி விதியில் மாற்றம் செய்யப்பட்டது. பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சி விதியை மாற்ற முடியாது என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.

இன்று, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பாலாஜி, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று, சூரியமூர்த்தியின் வழக்கை நிராகரிக்க மறுத்த, உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். அதேபோல, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கையும் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments