மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வரிவிதிப்பின் கீழ் எந்தெந்த பொருள்களின் விலை குறையும், மேலும் எந்தெந்த பொருள்களின் விலை அதிகரிக்கும், என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை பார்க்கலாம்.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று புதன்கிழமை (03-09-25) அன்று புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22-ம் தேதி முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார். சில உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களின் விலை குறையவுள்ளது. அதே நேரத்தில், ஆடம்பர பொருட்களுக்கு 40% சிறப்பு வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி குறைக்கப்படும் பொருட்கள்:
தினசரி உபயோகப் பொருட்களான ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை, டாய்லெட் சோப் பார், டூத் பிரஷ், ஷேவிங் கிரீம், வெண்ணெய், நெய், சீஸ், உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5% வரி விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கவரில் அடைத்து விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள், புஜியா கலவை, பாத்திரங்கள், குழந்தைகளுக்கான பாலூட்டும் பாட்டில்கள், நாப்கின்கள் மற்றும் டயப்பர்கள், பிஸ்கட், சாக்லெட்டுகள் மற்றும் கோகோ பொருட்கள், தையல் இயந்திரம் மற்றும் அதன் உதிரி பாகங்கள் வரியும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
உலர வைக்கப்பட்ட பொருட்களான பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12%-லிருந்து 5%-ஆக குறையும். தவிர, சர்க்கரை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.
விவசாய இடு பொருட்களான உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நுண்ணூட்டச் சத்துக்கள், சொட்டுநீர் பாசன அமைப்புகள், தெளிப்பான்கள், விதைகள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12% அல்லது 18 சதவீதத்தில் இருந்து, 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5%-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரைபடங்கள், விளக்கப்படங்கள், குளோப்கள், பென்சில்கள், அழிப்பான்கள், வண்ணங்கள், புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள், யு.ஹெச்.டி பால் பொருட்கள், பன்னீர் ஆகியப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வரி அதிகரிக்கும் பொருட்கள்:
பான் மசாலா, குட்கா, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், சர்தா, பீடி உள்ளிட்ட பொருட்களுக்கு 40% வரிவிதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கார்பனேட்டம் செய்யப்பட்ட குளிர்பானம், சோடா, இனிப்பு சேர்க்கப்பட்ட பானம் உள்ளிட்ட பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடம்பர பொருட்கள், சொகுசு கார்கள், விளையாட்டு போட்டிக்கான டிக்கெட்டுகள், ப்ரீமியம் மதுபான வகைகள் மீதான வரி 40% என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி மீதான ஜிஎஸ்டி வரி 5%-லிருந்து 18%-ஆக அதிகரித்துள்ளது.