உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலை மருத்துவக் கல்லூரிகள் பிரிவில், புதுச்சேரி ஜிப்மர் (ஜவஹர்லால் மருத்துவ முதுநிலை பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்) 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டில் 5-வது இடத்தில் இருந்த இந்த நிறுவனம், இந்த ஆண்டு 4-வது இடத்திற்கு தரம் உயர்ந்துள்ளது.
இது குறித்து ஜிப்மர் மருத்துவக் கல்லூரி தரப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மத்திய கல்விதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் 2025-ம் ஆண்டிற்கான உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) என்பது நாட்டில் உள்ள கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களை தரவரிசைப்படுத்த இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்பாகும்.
தரவரிசை கட்டமைப்பானது கற்பித்தல், கற்றல் மற்றும் கற்பிக்கும் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவுகள், சமுதாய வளர்ச்சி மற்றும் சேவைக்கான முயற்சி மற்றும் அனைத்து தரப்பினருக்குமான சமமான வாய்ப்பை வழங்குதல், கல்வி நிறுவனத்தைப் பற்றிய அறிஞர்களின் அங்கீகாரம் ஆகிய ஐந்து காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்கிறது.
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் மூலம் இன்று வெளியிடப்பட்டுள்ள இந்திய தரவரிசை 2025இல் ஜவஹர்லால் மருத்துவ முதுநிலை பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) மருத்துவக் கல்லூரிகள் பிரிவில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
2024-ம் ஆண்டில் 5-வது இடத்தில் இருந்த இந்த நிறுவனம், இந்த ஆண்டு 4-வது இடத்திற்கு தரம் உயர்ந்துள்ளது. இது மருத்துவக் கல்வி வழங்குதலில் ஜிப்மரின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது.
இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த ஜிப்மர் இயக்குனர் டாக்டர் வீர் சிங் நேகி அவரகள், “ஜிப்மர் அதன் கற்பித்தல் உள்கட்டமைப்பு மற்றும் புதுமையான கற்றல் முறைகளை மேம்படுத்த தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இந்த அங்கீகாரம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சியில் மிக உயர்ந்த தரங்களைப் பராமரிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மற்றும் மனிதாபிமானத்துடன் சேவை செய்யும் மருத்துவத்தின் அனைத்து துறைகளிலும் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதே எங்கள் தொலைநோக்குப் பார்வை” என்று கூறினார்.