சீனா யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சுவதில்லை என்றும், சீனாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது என்றும் சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பின் போது அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி சீனாவின் தியான்ஜென் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் கலந்துரையாடினர். அமெரிக்க வரி விதிப்பால், மூன்று முக்கிய நாடுகளும் அதிப்ருதியில் உள்ள நிலையில் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
7 ஆண்டுகளுக்கு பின், பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றார். 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன படைகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதை அடுத்து, இருநாட்டு உறவில் நல்லிணக்கம் இல்லாத நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அப்போது, “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்து இருந்தார்.
அதன் பின்னர், இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான், சீனாவிடம் சரணடைந்ததன் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இந்த ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த ராணுவ அணிவகுப்பு மூலம், சீனா தனது ஆயுத பலத்தை உலகுக்குக் காட்டுவதாக அமைந்துள்ளது. இந்த அணிவகுப்பில் நிறைய ஆயுதங்களும், தளவாடங்களும் செயற்கை நுண்ணறிவு கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் ரஷ்யாவின் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரியாவின் கிம் ஜாங் உன் உட்பட 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அரசுத் தலைவர்களுக்கு ஷி ஜின்பிங் வரவேற்பு அளித்தார். பின்னர், பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், 50,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கூட்டத்தில், டிரம்பின் பெயரைக் குறிப்பிடாமல், ‘சீனா யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சுவதில்லை, என்றும் சீனாவின் வளர்ச்சி தடுத்து நிறுத்த முடியாதது’ எனவும் ஷி ஜின்பிங் பதிலளித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், “இன்று, மனிதகுலம் மீண்டும் அமைதி அல்லது போர், உரையாடல் அல்லது மோதல், வெற்றி அல்லது பூஜ்ஜியம் என்ற தேர்வை எதிர்கொள்கிறது. வரலாற்றின் சரியான பக்கத்தில் சீன மக்கள் உறுதியாக நிற்கிறார்கள்” என்று கூறினார்.