Thursday, September 11, 2025
Homeதமிழ்நாடு'உயிரைக் கொடுத்து பெற வேண்டிய ஒன்று' என பெரியார் சொன்னார் - மு.க.ஸ்டாலின்

‘உயிரைக் கொடுத்து பெற வேண்டிய ஒன்று’ என பெரியார் சொன்னார் – மு.க.ஸ்டாலின்

உலகத்திலேயே உயிரைக் கொடுத்து பெற வேண்டிய ஒன்றே ஒன்று சுயமரியாதைதான் என்று பெரியார் அழுத்தம் திருத்தமாக சொன்னார் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக, இங்கிலாந்து சென்று மு.க.ஸ்டாலின், முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டார்.

இதனிடையே லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில், இன்று காலை வரலாற்று சிறப்புமிக்க சம்பவமான பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து “The Dravidian Pathway” and “The Cambridge Companion to Periyar” என்ற நூலையும் வெளியிட்டார்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தை உலகமயமாக்கும் நோக்கத்துடன் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள, பேராசிரியர்கள் பைசல் தேவ்ஜி, ஜேம்ஸ் மல்லின்சன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி! சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கின்ற எனக்கு, இதைவிடப் பெருமை இருக்க முடியாது.

தந்தை பெரியாரின் கொள்கை வாரிசு என்று நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறேன். பலமுறை பெரியாரைப் பார்த்திருக்கிறேன். எங்களது இல்லத்தில் நடைபெற்ற திருமணத்தை நடத்தி வைக்க, தந்தை பெரியார் வந்தபொழுது, இந்தக் கையால் அவருக்கு உணவு பரிமாறி இருக்கிறேன். இதை சொல்லும்போதே எனக்குள் பெருமை பொங்குகிறது!

ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டி தலைநிமிர வைத்த தந்தை பெரியாரை இன்றைக்கு உலகம் கொண்டாடி வருவதுதான் தமிழ்நாட்டுக்கும், திராவிட இயக்கத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை!

1983 செப்டம்பர் 21-ஆம் நாள், இதே ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில், ஆசிரியர் வீரமணி கலந்துகொண்ட தந்தை பெரியார் நூற்றாண்டு விழா நடந்தது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல ஆகிய பிறகு, இன்றைக்கு மீண்டும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு ஒளி பரவுகிறது!

பெரியாருக்கு மிக மிகப் பிடிச்ச சொல், சுயமரியாதை! உலகத்தில் எந்த அகராதியை கொண்டுவந்து காட்டினாலும், இதைவிட சிறந்த சொல்லைக் காட்ட முடியாது என்று சொன்னார் அவர். ஒரு மனிதனுக்கு சுயமரியாதை எண்ணத்தை ஊட்டிவிட்டால், அவன் வெற்றிப் பெற்றுவிடுவான் என்று சொன்னார்.

அதுமட்டுமில்ல, “உலகத்துலேயே உயிரைக் கொடுத்து பெற வேண்டிய ஒன்றே ஒன்று சுயமரியாதைதான்” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார். மனிதனோட சுயமரியாதையைக் காப்பதற்காகத்தான் எல்லா அரசியல் தத்துவங்களும் தேவை என்று சொல்லி, தான் உருவாக்கிய இயக்கத்துக்கே சுயமரியாதை இயக்கம் என்று பேர் வைத்தார்.

அப்படிப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு, இங்கே மாபெரும் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர்களால் ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதை பார்த்து மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகிறேன்.

இந்த சிறப்பான நூலை, இந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றவரான ஆ.இரா.வெங்கசாலசபதி அவர்களோட முயற்சியால், பெரியார் குறித்த நூலை Cambridge University Press வெளியிட்டிருக்கிறது. பெரியார் உலகமயமாகிட்டார் என்பதன் அடையாளம்தான் இது. அவரின் சிந்தனைகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது; மானிடச் சமுதாயத்துக்கானது! உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது! அதுதான் பெரியாரியம்!” என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments