நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹைதராபாத் முழுவதும் பிரம்மாண்டமான உயரத்தில் விநாயகர் சிலைகளை அமைத்து பக்தர்கள் பூஜைகள் செய்து வருகின்றனர்.
நேற்றூ ஹைதராபாத் ராயதுர்க்கத்தில் உள்ள மை ஹோம் வளாகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலையை எடுத்துச் சென்று தண்ணீரில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக விநாயகருக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த லட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. அப்போது அந்த லட்டுவை கம்மம் மாவட்டத்தில் உள்ள எலாண்ட் கிராமத்தைச் சேர்ந்த கொண்டபள்ளி கணேஷ் 51 லட்சத்து 77 ஆயிரத்து 777 ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கினார்.
கடந்தாண்டு மை ஹோம் விநாயகர் லட்டு 29 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகி இருந்தது. விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டுக்களை வாங்கி விளைநிலங்களில் தெளித்தால் அந்த ஆண்டு விளைச்சல் பெருகும், உடல்நலம் சீராகும் என்பது தெலுங்கானா மாநில பொதுமக்களின் அசைக்க இயலாத நம்பிக்கை.
எனவே விநாயகருக்கு படைக்கப்படும் லட்டுக்களை போட்டி போட்டு ஏலம் எடுக்கும் நபர்கள் தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு பகிர்ந்தது தவிர மீதியை கிராம விளைநிலத்தில் தூவுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.