10 நாட்கள் காலக்கெடுவிற்குள் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒத்த மனநிலை கொண்டவர்களை ஒருங்கிணைக்கும் பணியை நாங்கள் மேற்கொள்வோம் என்று மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்று அதிமுக மூத்த நிர்வாகியான கே.ஏ.செங்கோட்டையன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி துரோகிகளுக்கு இடமில்லை என்று கூறி தொடர்ந்து அந்த கருத்தை புறக்கணித்து வருகிறார்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “1972ஆம் ஆண்டில் அதிமுகவில் கிளைச்செயலாளராக பணியை தொடங்கினேன். 1975ஆம் ஆண்டு கோவையில் அதிமுக பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியதற்காக எம்ஜிஆரால் பாராட்டு வாங்கியவன்.
அதிமுகவில் எம்ஜிஆரை விட செல்வாக்கு மிக்கவர்கள் உண்டா?. அப்படிப்பட்ட அவரே கட்சியில் இருந்து எஸ்டிஎஸ், கோவை செழியன் போன்றவர்கள் வெளியேறியபோது அவர்களது வீட்டிற்கே சென்று அழைப்பு விடுத்தார். கட்சி நன்றாக இருக்க வேண்டும், தொண்டர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் அவ்வாறு செய்தார். அதனால் தான் 10 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சி நடத்தினார்.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவை கட்டுக்கோப்பாக வழிநடத்த வேண்டும் என்று நான் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் எல்லோரும் ஜெயலலிதாவை நேரில் சென்று கேட்டுக் கொண்டோம். அவரும் 5 முறை முதலமைச்சராக தேர்வாகி மிகச்சிறப்பான ஆட்சியை நடத்தினார்.
இடையில் டெபாசிட் கூட வாங்க முடியாத தோல்வியையும் அதிமுக சந்தித்தது. அப்போது ராஜதந்திரத்துடன் செயல்பட்டு கோபித்துக்கொண்டு போன தேமுதிகவை சமாதானப்படுத்தி அழைத்து, மதிமுக – கம்யூ. போன்ற கட்சிகளை இணைத்து அதிமுகவை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு வந்தவர் ஜெயலலிதா.
1991 காலகட்டத்தில் ஜெயலலிதா மீது, அதிமுக மூத்த நிர்வாகிகளை நீங்கள் மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சட்டசபையில் எழுப்பப்பட்டது. மூத்தவர்களை என் அருகிலேயே வைத்து அவர்களது ஆலோசனையின் படி தான் நடக்கிறேன் என என்னையும் சுட்டிக்காட்டி அம்மா பேசினார்.
அம்மாவின் மறைவுக்குப் பிறகு கட்சிக்கு பல்வேறு சோதனைகள் வந்தன. ஆனால் அதிமுக உடைந்து விடக்கூடாது என்பதற்காக சசிகலா அவர்களை பொதுச்செயலாளராக ஒருமனதாக நியமித்தோம். காலச்சக்கரம் சுழன்றதில் எடப்பாடி பழனிசாமி அந்த பொறுப்பிற்கு வந்தார். இடையில் அதிமுகவின் தலைமையை ஏற்க எனக்கு 2 வாய்ப்புகள் வந்தன. ஆனால் அதிமுக உடைந்து விடக்கூடாது என்பதற்காக தியாகம் செய்தேன்.
2016ஆம் ஆண்டிற்குப் பிறகு பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளோம். 2019, 2021, 2024 மற்றும் உள்ளாட்சித் தேர்தல் போன்ற தேர்தல்களை சந்திக்கும் போது களத்தில் பல பிரச்னைகளை எதிர்கொண்டோம். ஒருவேளை 2024ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் 30 இடங்களை வென்றிருப்போம்.
தேர்தல் முடிந்தபிறகு நானும், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சிவி சண்முகம் என 6 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தோம். தோல்விக்கான காரணங்கள் என்ன? தொண்டர்களின் மனநிலை என்ன? என்பது போன்ற கருத்து பரிமாற்றம் நடந்தது. அதிமுக களத்தில் தொய்வாக இருக்கிறது, வெளியே சென்றவர்கள் இணைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
ஆனால், அந்த கருத்தை ஏற்கும் மனநிலையில் அவர் இல்லை. வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும். ஆட்சி மாற்றம் வேண்டும் என்றால் வெளியே சென்றவர்களை இணைக்க வேண்டும் என்றேன்.
மேலும் வெளியே சென்றவர்கள் எவ்வித நிபந்தனை இல்லாமல் உள்ளே வர தயாராக இருக்கிறார்கள். தேர்தல் களம் சூடுபிடித்து விட்டது. விரைந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடு விதிக்கிறோம்.
அதற்குள் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த கருத்துள்ள ஒத்த மனநிலை கொண்டவர்களை ஒருங்கிணைத்து இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். அதாவது எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைக்கவில்லை என்றால் நாங்கள் ஒருங்கிணைப்போம்” என்று காட்டமாக தெரிவித்தார்.