பட்டியலின சகோதரரை காலில் விழ வைத்த திமுக சமூகநீதி குறித்து பேசலாமா? சமூக நீதி குறித்து முதலமைச்சர் லண்டனில் பேச வேண்டாம் முதலில் தமிழகத்தில் பேச வேண்டும் என்று பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வ.உ.சிதம்பரனாரின் 154ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “இன்றைய காலகட்டத்தில் மரியாதைக்குரிய வ.உ.சி.க்கு மரியாதையை செலுத்தக்கூடிய தகுதி உடைய ஒரே கட்சி பாஜக தான். கப்பலோட்டிய தமிழன் மூன்று போர்க்கப்பலை இந்தியாவிலேயே தயாரித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டனில் சென்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெரியாரின் புகைப்படத்தை திறக்கிறார். திண்டிவனத்தில் பட்டியல் இன சகோதரரை காலில் விழ வைத்துள்ளார்கள். சமூகநீதி எங்கே உள்ளது? சமூக நீதி குறித்து லண்டனில் பேச வேண்டாம், ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டியில் பேச வேண்டாம், முதலில் தமிழ்நாட்டில் பேசுங்கள்.
இந்திய கூட்டணியை சேர்ந்தவர்கள் மயான அமைதியில் இருக்கிறார்கள். மக்களுக்கு நல்லதான மக்களுக்கான அடிப்படை பொருள்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. மக்களுக்காக தான் கட்சி நடத்துகிறீர்கள் என்றால், ஒரு நன்றி அறிவிப்பாவது செய்திருக்கலாம்.
திமுகவினர் மட்டும் பங்களாவில் வாழ வேண்டிய நிலை இல்லை. சாதாரண மக்களும் வாழ்வார்கள் என்ற நிலையை நாங்கள் உருவாக்கி உள்ளோம். வேண்டுமென்றே அரசியல் செய்வார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது வைகோ எங்கே சென்றார்? திருமாவளவன் எங்கே சென்றார்?” கேள்வி எழுப்பினார்.
அதிமுக ஒன்றிணைவு குறித்த செங்கோட்டையனின் கருத்துக்கு பதிலளித்த தமிழிசை, “ஒரு கட்சியை சார்ந்த தலைவர், அதே கட்சியை சார்ந்த தலைவருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். அது உட்கட்சி விவகாரம். ஏற்கனவே பாஜகவும் அதிமுகவும் இணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதற்காக தான் 2026 தேர்தலுக்காக கூட்டணி வைத்துள்ளோம். எல்லோருடைய கருத்தையும் கேட்டு தான் இந்த கூட்டணி வைக்கப்பட்டுள்ளது எந்த குறையும் சொல்லாத அளவிற்கு எங்களுடைய கூட்டணி சிறப்பாக உள்ளது” என்றார்.
மேலும் கூறிய அவர், பட்டியல் இன மக்களுக்கு பிரச்சனை வந்தால் கூட, திருமாவளவனால் எதிர்த்து பேச முடியவில்லை எந்த அளவிற்கு திருமாவளவனை கொண்டு வந்து விட்டார்கள் என்றால், பட்டியல் இனத்திற்கு மட்டுமா நான் பேச வேண்டும் சொல்லும் அளவிற்கு கபளிகரம் செய்து விட்டார்கள். நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம் எல்லோரையும் பேச விடுகிறோம்’ என்றார்.