இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், கோப்பையை தீர்மானிக்கும் 2ஆவது போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் ஃபீல்டிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மேத்யூ ப்ரீட்ஸ்கே 85 ரன்களும், ட்ரிஸ்டன் ஸ்டப்பஸ் 85 ரன்களும், எய்டன் மார்க்ரம் 49 ரன்களும் எடுத்தனர்.
இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக களமிறங்கி வரும், இளம் வீரர் ப்ரீட்ஸ்கே தனது முதல் 5 போட்டிகளிலுமே, 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். முதல் போட்டியில் 150 ரன்களும், 2ஆவது போட்டியில் 83 ரன்களும், 3ஆவது போட்டியில் 57 ரன்களும், 4ஆவது போட்டியில் 88 ரன்களும், நேற்றைய போட்டியில் 85 ரன்களும் எடுத்துள்ளார்.
இங்கிலாந்து தரப்பில் அதிகப்பட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடில் ரஷித் 2 விக்கெட்டுகளையும், ஜேக்கப் பெத்தல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
தொடர்ந்து 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தொடக்க வீரர்களான ஜேமி ஸ்மித் (0), பென் டக்கெட் (14) இருவரும் பெரியளவில் சோபிக்கவில்லை. ஆனால், அடுத்து களமிறங்கிய ஜேக்கப் பெத்தல் 58 ரன்களும், ஜோ ரூட் 61 ரன்களும், ஹாரி புரூக் 33 ரன்களும், ஜாஸ் பட்லர் 61 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
கடைசி 3 ஓவர்களில் 40 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், கடைசியில் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால், தோல்வியை தழுவியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருது ப்ரீட்ஸ்கேவிற்கு வழங்கப்பட்டது.