அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாகனத்தை வழி மறித்து ஓரணயில் ஒன்றிணைய வேண்டும் என்று தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவரும் அஇஅதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை வழி மறித்த அதிமுக தொண்டர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். தவிர, அதிமுகவின் உண்மை தொண்டர்கள், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி உண்மை விசுவாசிகள் பிளவுபட்ட அதிமுகவை ஓர் அணியில் திரட்டி வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் அதிமுகவை வெற்றி பாதைக்கு திரும்பச் செய்து ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ‘கட்சியில் இருந்து வெளியேறிவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடு விதிக்கிறோம்.
அதற்குள் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த கருத்துள்ள ஒத்த மனநிலை கொண்டவர்களை ஒருங்கிணைத்து இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். அதாவது எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைக்கவில்லை என்றால் நாங்கள் ஒருங்கிணைப்போம்” என்று காட்டமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.