அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து தன்னை நீக்கியதற்கு காலம் பதில் சொல்லும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்தது. இந்த சூழலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் அனைவரும் ஒன்றிய வேண்டும், அதற்கு 10 நாட்களாக கெடு விதித்திருந்தார்.
இதனை தொடர்ந்து செங்கோட்டையன் உட்பட அவருடன் இருந்த சிலரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய செங்கோட்டையன், “ கட்சி பொறுப்பில் இருந்து தன்னை நீக்குவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை” என கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், எட்டு மாதங்களுக்கு முன்பு பொதுச்செயலாளரைச் சந்தித்து, பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று நான உட்பட ஆறு பேர் கோரிக்கை வைத்தோம். இது குறித்து ஒரு தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெளிவுபடுத்தியிருக்கிறேன். ஜனநாயக அடிப்படையில், கட்சி என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால், விளக்கம் கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என் மீதான நடவடிக்கைக்கு காலம் பதில் சொல்லும். எனது ஒருங்கிணைப்பு பணி தொடரும். ”காலில் விழுகிறோம், இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று காஞ்சிபுரத்தில் சிலர் கூறியிருந்தனர். ஆனால், அந்தக் கோரிக்கையை புறக்கணித்துள்ளனர். நான் கூறிய கருத்திற்கு பிரேமலதா எச். ராஜா நைனார் நாகேந்திரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.