சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தின் 53ஆம் ஆண்டு திருவிழாவின் தேர் பவனி நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தின் 53ஆம் ஆண்டு திருவிழா கடந்த ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் மிக விமரிசையாக தொடங்கியது.
அதன் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (07-09-25) நடைபெற்றது. முன்னதாக மயிலை மறை மாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணி தாஸ் தலைமையில் சிறப்பு திருப்பள்ளி நடைபெற்றது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த தேர் திருவிழா நிகழ்வில், சென்னை மயிலை மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தேரை வடம் பிடித்து இழுத்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தார்.
வேளாங்கண்ணி மாதா ஆரோக்கிய அன்னையின் 28 அடி உயரத்தில் கையில் குழந்தை இயேசு உடன் இருப்பது போல் வண்ண பூக்களாலும், வண்ண வண்ண மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இந்த தேரானது வேளாங்கண்ணி மாதா கோவிலில் தொடங்கி பெசன்ட் நகர் கடற்கரை சாலை, ஆல்காட் பள்ளி, பெசன்ட் நகர் டிப்போ வழியாக சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்று மீண்டும் மாதா கோவிலுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது.
இந்த தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சென்னை மற்றும் வெளியூர்களில் இருந்து பங்கேற்று பிரார்த்தனை மேற்கொண்டனர். தேர் திருவிழாவையொட்டி சென்னை பெருநகர காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மறை மாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணி, “இறைவனின் அன்பு செயல், தேர் பவனி மூலம் நம்மை நாடி தேடி வருகிறார் நமக்காக எதையும் செய்வார். அன்னையின் அன்பு உலகில் உள்ள அனைவருக்கும் சமமான அன்பு. எந்தவிதமான மதம், இனம், மொழி என்று இல்லாமல் அனைவருக்கும் ஆனவர்.
உலகில் அமைதி ஏற்படவும், நாட்டில் அனைத்து மக்களும் சுபிட்சமாக வாழ, ஒற்றுமையாக இருக்க அன்னையின் உதவியை நாடுவோம். திருவிழாவிற்கு வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன” என்றார்.