தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. ஆளுங்கட்சி சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், வெளிநாட்டு முதலீடுகள் என பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. பிரதான எதிர்கட்சியான அதிமுக சார்பில், மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
புதிதாக கட்சி தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், வருகிற 17-ந் தேதி முதல் மக்களை நேரடியாக சந்திக்க சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்து உள்ளார். தனித்து களம் கண்டு வரும் சீமான், மாடுகள் – மரங்களிடையே கூட பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்.
இதற்கிடையில் கடந்த 5ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ‘அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அல்லது நீக்கி வைக்கப்பட்டுள்ள அனைவரையும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஒருங்கிணைந்த அதிமுக உருவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியிருந்தார். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்களுக்கு கெடு விதித்து இருந்தார்.
இது அதிமுகவில் புயலை கிளப்பிய நிலையில் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து செங்கோட்டையன் உட்பட அவரது ஆதரவாளர்கள் விடுவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு அதிமுக கட்சி வட்டாரத்தில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகின்றன.
இதற்கிடையில், கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, மு.க.ஸ்டாலின் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் வருகின்ற, 2026ஆம் சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்” 09-09-2025 செவ்வாய் கிழமை நண்பகல் 12.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது திமுக முப்பெரும் விழா, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை ஆகியவை குறித்து விவாதிக்கப்படுகிறது. ஆகையால், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.