கோவையில் தொழில் முனைவோர்களுக்கு இந்தியா டுடே நடத்திய மாநாட்டில் தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்று உரையாற்றினார். அதில், ”தொழில் முனைவோரின் புதுமையான பணிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நகரம் கோவை. ஒட்டுமொத்தமாக தட்பவெப்பநிலை, தண்ணீர், மக்கள், மாணவ – மாணவியர்களுக்கான கல்வி என கோவையில் அனைத்தும் ஒருங்கே கிடைக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் ஆட்டோ மொபைல், உற்பத்தி, கருவிகள் உருவாக்கம் ஆகிய ஆலைகள் நிறைந்திருப்பதால் முதலீட்டாளர்கள் வருகின்றனர். அந்த வகையில் கோவை சிறந்து விளங்குகின்றது என்றதுடன் மத்திய, மாநில அரசுகளிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். தேவை மற்றும் விநியோகத்திற்கு ஏற்றபடி, ஒரு நிறுவனத்திற்கு உரிமம் வழங்க வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு காலத்தில் அதிகமான உணவகங்கள் கோவையில் திகட்டத் திகட்ட இருந்தன. இது அந்த துறையை முடக்கிவிடும். எனவே, அது மக்களின் தேவைக்கு ஏற்ப இருந்தால் நன்றாக இருக்கும் என பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், போக்குவரத்துத்துறையில் ஏர் டாக்ஸிக்கு மிகச் சிறந்த வாய்ப்புகள் உள்ளன. நான் அது தொடர்பான ஸ்டார்ட்அப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், ஏர் டாக்ஸியை அமெரிக்காவில் உருவாக்கத் தோராயமாக ரூ.10 கோடி செலவாகலாம். நாம் அதை தமிழ்நாட்டில் ரூ.2 கோடிக்குள் உருவாக்க முயன்று வருகிறோம். இந்தியாவில் ஏர்டாக்ஸி உருவாக்கத்தில் புதுமையைப் புகுத்தி, குறைந்த செலவில் உருவாக்க முயற்சிக்கின்றோம். மீண்டும், பொதுப் போக்குவரத்திற்கு வந்தால், நம்மிடம் மெட்ரோ ரயில் கோவைக்கு வர இருக்கிறது. இது ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் என பேசினார்.

மேலும், கோவையின் வளர்ச்சிக்கு நாம் ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஏ.ஐ. தொழில் நுட்பம் மிக முக்கியமானது. ஐடி பூங்காக்களைப் போல, ஏ.ஐ. தொழில் நுட்பப் பூங்காக்களை நாம் விரைவில் உருவாக்க வேண்டும். நம்மிடம் புதுமைக்கான ஆதரவு இருக்கிறது. புதிய ஐடியாக்களுடன் வருபவர்களை பெருமளவில் ஆதரிக்க வேண்டும் என்றும், கோவைக்கு நிறைய ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதனால், மக்களுக்கான போக்குவரத்து எளிதாகும். சமீபகாலமாக, கோவையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. மேலும், ஐ.டி. பூங்காக்களும் கோவைக்குத் தேவை என்றும் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார்.