புதுச்சேரி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்காவிட்டால், மக்களை ஒருங்கிணைத்து அரசுக்கு எதிராக மாநில முழுவதும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என ஜேசிஎம் மக்கள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் கலந்த நீர் விநியோகிக்கப்படுவதால், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வலியுறுத்தி, ஜேசிஎம் மக்கள் மன்றத்தின் தலைவர் வில்லியம்ஸ் ரீகன் இன்று பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, “புதுச்சேரியின் நலனுக்காகவும், மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், ஜேசிஎம் மக்கள் மன்றம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. புதுச்சேரியின் உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நேரு நகர், கோவிந்தசாலை மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிக்கு உட்பட்ட சக்தி நகர், பிள்ளைதோட்டம், பெரியார் நகர், காமராஜர் நகர் தொகுதி சாரம், ஜீவா நகர், கவிக்குயில் நகர் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் கலந்த நீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நீரை குடித்த, பொதுமக்களில் பலர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதை அறிய நேரிடுகிறது. உச்சக்கட்டமாக இந்த மாசடைந்த நீரைக் குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம், நெஞ்சை பதறச் செய்கிறது.
உயிருக்கே உலை வைக்கும் ஆபத்தான நோய்களுக்குக் கூட மருந்து, மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டு நோயாளிகள் உயிர்காக்கப்படும் காலகட்டத்தில் சுத்தமான நீர் இல்லாத காரணத்தால் மூன்று பேர் வயிற்றுப்போக்கு நோய்க்கு ஆளாகி உயிரிழப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இன்னும் சொல்லப்போனால் இது நோயால் உண்டான மரணம் அல்ல, முறையாக நீரை விநியோகிக்காத அதிகாரிகள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டிய ஒரு குற்றமாகும்.
ஏதோ ஒரு நாளில் நிகழ்ந்துவிட்ட தவறாக இதனை எண்ணி கடந்து விடமுடியாது. ஒவ்வொரு நாளும் சரியான முறையில் நீர் விநியோகம் நடக்கிறதா என்பதை கவனிக்க வேண்டிய பொறுப்பு பொதுப்பணித்துறைக்கு உண்டு. அவ்வாறு செயல்பட்டு இருந்தால் 3 உயிர்கள் பறிபோயிருக்காது. இத்தனை பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.
மழைக்காலங்களில் குடிநீருடன் கழிவுநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவற்றை போர்க்கால அடிப்படையில் பொதுப்பணித்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். அத்தியாவசியமான மற்றும் மக்களின் உரிமையான சரியான குடிநீரை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை இப்போதே கோரிக்கை மனுவாக கொடுக்கிறோம். நிலைமை சீரடையாதபட்சத்தில் மக்களை ஒருங்கிணைத்து மாநிலம் முழுவதும் பெரும் போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.