தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து 342 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றதோடு, கோப்பையையும் தன்வசம் ஆக்கியது.
இந்நிலையில் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, சம்பிரதாய போட்டியாக அமைந்தது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 31 ரன்களிலும், ஜேமி ஸ்மித் 62 ரன்களிலும் வெளியேறினார்.
ஆனால், அதன் பிறகு நடந்தவை எல்லாம் சரவெடி வாணவேடிக்கை தான். ஒருபுறம் ஜோ ரூட் தனது அனுபத்தை கொண்டு நிதானமாக ஆடினார். ஆனால், மற்றொரு புறம் ஜேக்கப் பெத்தல் ருத்ர தாண்டவம் ஆடினார். இருவரும் இணைந்து 3ஆவது விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்தனர்.
பிறகு, 82 பந்துகளில் (13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) 110 ரன்கள் குவித்து வெளியேறினார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் 96 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில், வெறும் 6 பவுண்டரிகளை மட்டுமே ஜோ ரூட் எடுத்த நிலையில், 50 ஒரு ரன்கள், 10 இரண்டு ரன்கள், 2 மூன்று ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்டத்தில் பேட்டிங் புகுந்த ஜாஸ் பட்லர் 32 பந்துகளில் 62 ரன்களை சேர்த்தார். இதனால், இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 414 ரன்கள் குவித்தது. 2-0 என்ற கணக்கில் தொடரை வென்ற பின்பு, 400 ரன்களுக்கு மேல், தென் ஆப்பிரிக்கா அணி விட்டுக்கொடுப்பது இது இரண்டாது முறையாகும்.
பின்னர், 415 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, 20.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்கள் மட்டும் எடுத்து அபார தோல்வியை தழுவியது. அந்த அணியில், அதிகப்பட்சமாக கோர்பின் போஷ்ஜ் 20 ரன்களும், கேசவ் மஹாராஜ் 17 ரன்களும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 10 ரன்களும் எடுத்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இதனால், இங்கிலாந்து அணி 342 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2006ஆம் ஆண்டிற்கு பின்னர், இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்யும் வாய்ப்பை தென் ஆப்பிரிக்கா அணி நழுவவிட்டது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 4 விக்கெட்டுகளையும், அடில் ரஷித் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதுவே, ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும். இதற்கு முன்னதாக, 2003ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்தது.
மேலும், தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தனது இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தது. முன்னதாக, 1993ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரானப் போட்டியில், 69 ரன்களில் சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.
மேலும், தென் ஆப்பிரிக்கா அணி 400க்கும் அதிகமான ரன்களை விட்டுக் கொடுப்பது இது 4ஆவது முறையாகும். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி 5 முறை 400க்கும் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்துள்ளது. அதே சமயம் இங்கிலாந்து அணி 7 முறை 400க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளது.