படத்தில் நடிப்பதற்காக ரவி மோகன் பெற்ற, முன் பணத்தை திரும்பித் தரக் கோரிய வழக்கில் நடுவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சத்தியநாராயணனை அணுக இரு தரப்பினருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
படத்தில் நடிப்பதற்காக பெற்ற 6 கோடி ரூபாய் முன் பணத்தை திரும்ப தர நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக்கோரி, பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் (Bobby Touch Gold Universal Private Limited) நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல, கொடுத்த கால்ஷீட்டில் படத்தை தயாரிக்காமல் தமக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கூறி 9 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு உத்தரவிடக்கோரி நடிகர் ரவி மோகனும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், 5 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, நடிகர் ரவி மோகன் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் எம்.சுதீர்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த விவகாரம் தொடர்பான நடுவராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன் செப்டம்பர் 13ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாக நடிகர் ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகை பாலன் தெரிவித்தார்.
முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தயாரிப்பாளர் தரப்பு, பின், அதனை ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான நிவாரணங்களுக்கு நடுவரை அணுக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், பட தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் எழுப்பிய அனைத்து கோரிக்கைகளையும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை கருத்தில் கொள்ளாமல், நீதிபதி சத்தியநாராயணன் விசாரிப்பார் என்றும் உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.