சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படத்திற்கு யு ஏ சான்றிதழ் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து கடந்த ஆகஸ்ட் 14-ந் தேதி திரைக்கு வந்த படம் கூலி. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள அப்படம், திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் தணிக்கை வாரியத்தால் அப்படத்திற்கு ஏ சான்றிதழ் தரப்பட்டிருந்தது. அதிகப்படியான வன்முறை காட்சிகள், ரத்தம் தெறிக்கும் காட்சிகள் படத்தில் இருந்ததால் ஏ சான்றிதழ் தரப்பட்டது. அப்படித்தான் படமும் வெளியானது.
ஆனால் ஏ சான்றிதழ் உள்ள காரணத்தால் திரையரங்குகளில் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் அனுமதிக்கப்படவில்லை. இது படத்தின் வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து படத்திற்கு யூஏ சான்றிதழ் பெற தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முடிவு செய்தது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில், படத்திற்கு ஏ சான்றிதழுக்கு பதிலாக யூஏ சான்றிதழ் தர தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடக்கோரி மனுதாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கிறஞர், தேவைப்பட்டால் படத்தில் உள்ள வன்முறைக் காட்சிகளை நீக்கிவிட்டு புதிதாக விண்ணப்பித்தால் பரிசீலிப்பதாக பதிலளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.