தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில், நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்தால் மக்களுக்கு உண்மை கருத்துகள் வெளியாகும் என்று யூடியூப் பிரபலம் ஜனனி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாய் கடி நெருக்கடி வேகமாக அதிகரித்து வருவதை பொது சுகாதார நிபுணர்களை மிகவும் கவலையடையச் செய்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சக்கத்தின் கணக்கீட்டின் படி இந்தியாவில் ரேபிஸால் ஏற்படும் மனித இறப்புகள், கடந்த 3 மூன்று ஆண்டுகளில் முறையே 21, 50 மற்றும் 54 ஆக பதிவாகியுள்ளன. ஆனால், 2022ஆம் ஆண்டு மட்டும் 305 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மேலும், 2024ஆம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 37 லட்சத்து 17 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு நாளும் சராசரியாக 10 ஆயிரம் பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நெறிமுறைகளை வகுத்து வருகின்றன.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பாகும், ‘நீயா, நானா’ நிகழ்ச்சியில் தெரு நாய்களை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் குறித்து நடந்த விவாதம் நடைபெற்றது. அது தொடர்பான வீடியோக்கள் மட்டுமல்லாமல், ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல யூடியூபரும், சின்னத்திரை நடிகையுமான ஜனனி எந்தவித கருத்துகளையும் தெரிவிக்காமல் இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ்கள் வெளியிட்டது பேசுபொருளாகின. இந்நிலையில், நிகழ்ச்சியில் தான் பேசாமல் இருந்ததற்கான காரணத்தை ஜனனி விளக்கியுள்ளார்.
அதில் தெரிவித்துள்ள அவர், “நீயா, நானா நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன். ஆனால், நிகழ்ச்சி தொடங்கிய 10 நிமிடங்களிலேயே, டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக, முன் தீர்மானிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி, என்பதை தெரிந்து கொண்டேன். இதில், நான் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. விவாத நிகழ்ச்சி என்ற நாடகத்தில் ஆங்காங்கே அமர வைக்கப்பட்ட நடிகர்கள்தான் நாங்கள்.
8 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி 45 நிமிடங்களாக சுருக்கி வெளியிட்டுள்ளார்கள். மேலும், தெருநாய்கள் குறித்த தகவல்களை ஆதாரமாக அளித்தும், அதை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஏற்க மறுத்து விட்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் ஒரு சாராரின் கருத்துக்களை மட்டுமே சொல்லி விட்டு, அது விவாத நிகழ்ச்சி என கூறுவது எந்த வகையில் நியாயம்? அவர்கள் எங்களை பேச விடவில்லை.
என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், நீயா, நானா நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்தால் தான், நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்று மக்கள் தெரிந்து கொள்வார்கள். ஆகவே, எது உண்மை, எது பொய் என்று தெரியாமல் மக்கள் எதிர்வினை ஆற்றாதீர்கள்.
ரேபிஸ் நோயை கட்டுப்படுத்துவது, கருத்துடை மருந்துகள் செலுத்துவது உள்ளிட்ட அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுமே அரசின் பொறுப்பாகும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட படவா கோபி, நடிகை அம்மு, சமரன் உள்ளிட்ட யாரையும் சரியாக பேசவிடவில்லை. இந்த மாதிரியான தவறாக வழிநடுத்தும் நிகழ்ச்சியால் பாதிக்கப்படுவது, வாயில்லா ஜீவன்கள் தான்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நடிகை அம்மு ராமச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “நீயா நானா நிகழ்ச்சியின் நடந்தவற்றை தொகுக்காமல், முழுமையான வீடியோவை பார்த்தால் தான் என்ன நடந்தது என்று தெரியவரும். ஒரு பக்கம் நாயை விரும்புறவர்கள் தெரு நாயை ஆதரிக்கிறோம் என்று இருந்தோம். இன்னொரு பக்கம் வேண்டாம் என்று சொல்லுகிறவர்கள் இருந்தார்கள்.
எதிர்தரப்பில் இருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு தான் அதிகம். எங்கெல்லாம் நாய்களால் பிரச்சனை நடந்ததோ, அவர்களை எல்லாம் தேடி தேர்வு செய்து, அவர்களை கூட்டிவந்து கேள்விகேட்ட கோபிநாத் அவர்கள், எங்கள் தரப்பு நியாயத்தை கேட்கவில்லை. நாங்கள் பேசியதை கத்தரித்து, தொகுத்து வேறுமாதிரி வெளியிட்டார்கள்” என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.