மணிப்பூர் கலவரம் வெடித்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அங்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே மோதல் வெடித்தது. இதில் ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பில் இருந்தும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையாலும், கலவரத்தாலும் 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாக முகாம்களின் தஞ்சம் அடைந்தனர். நாடே வெகுண்டெழுந்ஹ இந்த கலவரத்திற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்கவில்லை என்றும், அவர் ஒருமுறை கூட மணிப்பூருக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களை சந்திக்கவில்லை என்றும் எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தனர்.
மணிப்பூர் கலவரம் வெடித்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில் பிரதமர் மோடி நாளை அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மிசோரம் மற்றும் மணிப்பூருக்கு பிரதமர் செல்லும் பயணம் குறித்த தகவல் வெளியானதால் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி மணிப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மணிப்பூர் செல்லும் மோடி அங்கு ரூ.8300 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். சுராச்சந்த்பூரில் மோடியை வரவேற்க வைக்கப்பட்ட பேனர்களை சிலர் அகற்ற முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மணிப்பூர் கலவரத்துக்கு பிறகு மோடி அங்கு செல்வதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளாத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு வழியாக செப்டம்பர் 13ம் தேதி மணிப்பூர் பயணம் செல்வதற்கு பிரதமர் மோடிக்கு தைரியம் வந்து விட்டது என தெரிகிறது என்று கிண்டலாக கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடி அங்கு முன்பே சென்று இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.